சென்னை: மதிமுக 30வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அவை தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றினார். பொதுக்குழுவில் பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும். தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; பாஜ அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பைநடத்த வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையின் செயல்களைத் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய பாஜ அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் முன்வைத்த கோரிக்கையை ஒன்றிய அரசு அலட்சியப்படுத்தி உள்ளதை கண்டித்தும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரியும், நீர் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மதிமுக சார்பில் ஆகஸ்டு 14ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.