சென்னை: சென்னை பக்கிங்காம் கால்வாய் கழிவுநீரை, நுண்ணுயிர் கலவை மூலம் நன்னீராக மாற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. அதாவது, சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை கடந்த 1806ம் ஆண்டு பக்கிங்காம் கால்வாய் உருவாக்கப்பட்டது. பின்னர் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிவரை இணைக்கப்பட்டது.
1886ம் ஆண்டில் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடிய பஞ்சத்தை எதிர்கொள்வதற்காக மக்களுக்கு வேலை கொடுத்து, கூலியும் கொடுக்கும் வகையில், இந்த கால்வாயை மேலும் நீட்டிக்க திட்டமிட்டனர். அதன்படி, எண்ணூரில் இருந்து அடையாறு வரை தோண்டப்பட்டது.
தென்னிந்தியாவின் முக்கிய நீர் வழிப் பாதையாகவும் ஒரு காலத்தில் பக்கிங்காம் கால்வாய் அமைந்திருந்தது. ஆந்திரா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய இந்த கால்வாய், படகு போக்குவரத்துக்கு பெரிதும் பயன்பட்டது. அரிசி, பருத்தி, மீன், கருவாடு எல்லாமே அந்தப் படகுகளில் பயணப்பட்டன. சென்னையில் மூலக்கொத்தளம் பகுதியில் கருவாட்டு மண்டி பிரபலம். ஆந்திர பகுதிகளில் இருந்து வரும் கருவாடுகள் மூலக்கொத்தளம் அருகே இருக்கும் படகுத்துறையில் வந்து இறங்கும். 1960-70 வரைகூட அங்கே கருவாடு இறக்குவதற்கான படகுத்துறை நல்ல நிலையிலே இருந்தது.
மதராசப்பட்டணம் படத்தில் சென்ட்ரலுக்கு எதிரே காட்டப்படும் படகு சவாரிக்காட்சிகள் பக்கிங்காம் கர்னாடிக் கால்வாய்தான். அந்த கால்வாய்க்கு மேலே ரயில்பாதையும் அதற்கு மேலே பேருந்து செல்லும் சாலையும் அமைக்கப்பட்டது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கால்வாய், சென்னை நகரமயமாக்கல் காரணமாக கழிவுநீர் கால்வாயாக மாறிப்போனது. இதனை மீண்டும் சீரமைக்க வேண்டும், என பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இந்த பக்கிங்காம் கால்வாயை புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் சிஎம்டிஏ, நீர்வளத் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதில் பக்கிங்காம் கால்வாயை புனரமைத்து, அழகுப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிலையில், தற்போது சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பக்கிங்காம் கால்வாயில் பைகிராப்ட்ஸ் சாலை முதல் லாக் நகர் வரையிலான சுமார் 2 கி.மீ தூரம், கழிவு நீரை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த நிறுவனம் கால்வாயில் 5 இடங்களில் தடுப்புகள் அமைத்து, கால்வாயில் ஓடும் திடக்கழிவுகளை அகற்றி வருகின்றனர். மேலும், அந்த இடங்களில் ‘டோசிங் பாயின்ட்’ (நுண்ணுயிர் கலவை தெளிக்கும் இடம்) அமைக்கப்பட்டு நுண்ணியிரிகள் கலந்த கலவையை பக்கிங்காம் கால்வாயில் தெளித்து வருகின்றனர். இந்த நுண்ணியிரிகள் கூட்டமைப்பு, பக்கிங்காம் கால்வாயில் ஓடும் கழிவுகளை தூய்மையான நீராக மாற்றும் எனவும், தற்போது இந்த பணியானது சோதனை அடிப்படையில் நடைபெறுவதாகவும், சோதனை வெற்றி அடைந்தால் பக்கிங்காம் கால்வாய் முழுவதும் இந்த பணிகள் விரிவுப்படுத்தப்படும் என்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மும்பை, உத்திரபிரதேச மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வெற்றி அடைந்துள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக பக்கிங்காம் கால்வாயில் ‘உயிரியல் சீரமைப்பு’ முறையில், கால்வாயில் ஓடும் கழிவு நீரை நுண்ணுயிர் கலவைகளை தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. சோதனை முறையில் நடந்து வரும் இந்த பணி, வெற்றி அடைந்தால், சென்னையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த பக்கிங்காம் கால்வாய் முழுவதும் இந்த பணி மேற்கொள்ளப்படும்,’ என்றனர்.
* துர்நாற்றம் குறையும்
இந்த உயிரியல் சீரமைப்பு முறையால், பக்கிங்காம் கால்வாயில் ஓடும் நீரில் இருந்து வீசும் துர்நாற்றத்தை வெகுவாக குறைத்து கட்டுப்படுத்த முடியும். மேலும், கடலில் சென்று சேரும்போது, கடல் நீர் மாசடைவதும் குறையும். குறிப்பாக, கொசு உற்பத்தி குறையும்.
* 5 இடங்களில்
பக்கிங்காம் கால்வாயில் கழிவை அகற்றும் பணியில் (உயிரியியல் சீரமைப்பு) ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் கூறுகையில், ‘இந்த கால்வாயில் தினம்தோறும் 40 முதல் 50 எம்எல்டி தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீரை உயிரியல் சீரமைப்பு முறையில் நல்ல நீராக மாற்றுகிறோம். 5 இடங்களில் நுண்ணுயிர் கலவைகளை சீராக கழிவுநீரில் தெளிக்க ‘டோசிங் பாயின்ட்’ அமைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், நுண்ணுயிர் கலவைகளை வாகனங்களில் சிறிய ரக டேங்கில் கொண்டு வந்து தெளிக்கப்படுகிறது. தற்போது, சோதனை அடிப்படையில் இந்த திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நீரில் உயிரியல் சீரமைப்பு நடைபெறுவதற்கு, 20 முதல் 30 நாட்கள் தேவைப்படும். இது முழுமையாக முடிந்த பிறகு, இந்த தண்ணீரை ஆய்வகத்தில் சோதனைக்குட்படுத்தி, அதில் உள்ள கழிவுகளின் அளவை கணக்கிடும் போது, முடிவு வெற்றிகரமாக அமைந்தால், இந்த திட்டம் முழு வீச்சில் விரிவுப்படுத்தப்படும்,’’ என்றனர்.
* படகு போக்குவரத்து தொடர்பாக ஆய்வு
வரலாற்று சிறப்புமிக்க பக்கிங்காம் கால்வாயை மீட்டெடுத்து புனரமைக்கும் வகையில், பைகிராப்ட்ஸ் சாலை முதல் லாக் நகர் வரையிலான சுமார் 2 கி.மீ நீளத்தில் மீண்டும் படகு போக்குவரத்து கொண்டு வந்து, சுற்றுலா தலமாக மாற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக, கால்வாயை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும், கால்வாயை புனரமைக்கும் பணியிலும் சிஎம்டிஏ, நீர்வளத் துறை, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், படகு போக்குவரத்துக்கான ஆய்வுகளும் அப்பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.