அண்ணாநகர்: பீகாரை சேர்ந்தவர் முகமதுசாதிக் (46). இவருக்கு 6 குழந்தைகள். அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கிறார். கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் குடும்பத்துடன் பேசிக்கொண்டு இருந்தபோது ஒரு வயது ஆண் குழந்தை முகமது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு ஒரு பக்கெட்டில் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென தவறி உள்ளே விழுந்தது. அதில் நிறைய தண்ணீர் இருந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
சிறிது நேரம் கழித்து குழந்தையை காணவில்லையே என்று பெற்றோர் தேடியபோது குழந்தை பக்கெட்டில் உள்ள தண்ணீரில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தகவல் அறிந்த அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆண் குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.