சேலம்: அகில இந்திய புச்சிபாபு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சேலம், கோவை, நெல்லை, நத்தம் ஆகிய நகரங்களில் ஆக.15ம் தேதி தொடங்கியது. மொத்தம் 12 அணிகள், தலா 3 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 3 சுற்றுகளாக போட்டி நடக்கிறது. இந்நிலையில் 3வது சுற்று ஆட்டங்கள் ஆக.27ம் தேதி தொடங்கியது. சேலத்தில் நடந்த பி பிரிவு ஆட்டத்தில் குஜராத்-டிஎன்சிஏ தலைவர்(தமிழ்நாடு) அணிகள் மோதின.
முதல் இன்னங்சிஸ் குஜராத் 371ரன் குவிக்க. தமிழ்நாடு 211ரன்னில் ஆட்டமிழந்தது. அதனால் 166ரன் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது குஜராத். தமிழ்நாடு வீரர்கள் சித்தார்த் மணிமாறன், பி.விக்னேஷ் ஆகியோர் மட்டுமே பந்து வீசி விக்கெட்களை அள்ள ஆரம்பித்தனர். அதனால் குஜராத் 58ரன்னிலேயே சுருண்டது. அபாரமாக பந்து வீசிய சித்தார்த் 8, விக்னேஷ் 2 விக்கெட்களை சுருட்டினர்.
அதனையடுத்து 218ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு 3வது நாளான நேற்றே இலக்கை கடந்து 5 விக்கெட் இழப்புக்கு 220ரன் எடுத்து. அதனால் 5 விக்டெ் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அணியில் சதம் விளாசிய ஆண்ட்ரூ சித்தார்த் 115(94பந்து, 15பவுண்டரி, 4சிக்சர்) ரன் குவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் தமிழ்நாடு 9 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. கூடவே முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. திருநெல்வேலியில் நடந்த ஏ பிரிவு 3வது சுற்றில் ஐதராபாத் அணி ஒரு இன்னிங்ஸ் 229ரன் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை வீழத்தி 2வது வெற்றியை பெற்றது. அதனால் ஏ பிரிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஐதராபாத் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. செப்.2ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் தமிழ்நாடு-ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.