சென்னை: 2 நெட்வொர்க் நிறுவனங்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 34 இணைப்புகள் பெற்று ரூ.49 லட்சம் டெலிபோன் பில் கட்டாமல் கடந்த 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 தொழிலதிபர்களை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் கடந்த 2003ம் ஆண்டு சையது இப்ராஹிம் (55) என்பவர் ‘எக்ஸ்செல் நெட்வொர்க்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார்.
அதேபோல் சென்னை பாரிமுனையில் ‘அக்ெஸஸ்’ என்ற பெயரில் அவரது நண்பரான முகமது தாஹா யாசீன் ஹமீம் (52) என்பவர் நிறுவனம் நடத்தி வந்தார். தொழிலதிபர்களான இருவரும் தங்களது நிறுவனத்திற்கு ஒன்றிய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 34 டெலிபோன் இணைப்புகள் பெற்றனர். அதன் பிறகு இழப்பு காரணமாக 2 நிறுவனத்தையும் மூடிவிட்டனர். ஆனால், நிறுவன பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட 34 இணைப்புக்கான டெலிபோன் பில் கட்டாமல் ஏமாற்றிவிட்டனர்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் கடந்த 26.3.2003ம் ஆண்டு சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு தொழிலதிபர்களான சையது இப்ராஹிம் மற்றும் முகமது தாஹா யாசீன் ஹமீம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்ற பிணையில் இருவரும் வெளியே வந்தனர்.
அதனை தொடர்ந்து 2 பேர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பிணையில் வெளியே வந்த 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். பிறகு கடந்த 2006ம் ஆண்டு இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் பிறகு 2 பேரும் எங்கு உள்ளார்கள் என்று தெரியாத நிலையில் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு மத்திய குற்றப்பிரிவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த 30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பிஎஸ்என்எல் மோசடி வழக்கை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பீர் பாஷா தலைமையிலான குழுவினர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து தலைமறைவாக உள்ள 2 தொழிலதிபர்களை தேடினர். அப்போது 2 தொழிலதிபர்களும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரியவந்தது. அதன்படி தனிப்படை கீழக்கரைக்கு சென்று பழைய புகைப்படங்களை வைத்து விசாரணை நடத்திய போது, இருவரும் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் தங்களது குடும்பத்துடன் தலைமறைவாக இருந்து வந்தது உறுதியானது.
அதைதொடர்ந்து கடந்த 19 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த 2 தொழிலதிபர்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். அதேபோல், கடந்த 2006ம் ஆண்டு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக 29 பேரிடம் சுந்தர் தனது நண்பர்கள் மூலம் ரூ.18 லட்சம் பணம் பெற்று, 29 பேருக்கும் போலி விசா கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுந்தர் தலைமறைவாக இருந்து வந்தார். அதன் பிறகு நீதிமன்றம் கடந்த 20.9.2017ம் ஆண்டு சுந்தர் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கும் குற்றவாளியை கைது செய்யமுடியாமல் போலீசார் கிடப்பில் போட்டனர். பின்னர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான குழுவினர் நடத்திய ேதடுதல் வேட்டையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளிஞ்சாடா கிராமத்தில் உள்ள ரஸ்லிங் ரிவர் ரிசார்ட்டில் பதுங்கி இருந்த சுந்தரை கைது செய்தனர். பிறகு சுந்தரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.