லக்னோ: லக்னோவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றிய ஐ.ஆர்.எஸ் அதிகாரி மீது மற்றொரு பணியாளர் தாக்கியதால் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அடுத்த ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் வருமான வரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இந்திய வருவாய் சேவை (ஐ.ஆர்.எஸ்) அதிகாரியாக கவுரவ் கார்க் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவரை அவருடன் பணியாற்றும் மற்றொரு அரசுப் பணியாளர் திடீரென தாக்கினார். காயமடைந்த கவுரவ் கார்க், உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு லக்னோ சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயங்களின் தன்மை அல்லது தாக்குதலுக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இவ்விவகாரம் தொடர்பாக லக்னோவின் துணை காவல் ஆணையர் அசிஷ் ஸ்ரீவஸ்தவா, மேற்கண்ட தாக்குதல் குறித்து ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தைத் தொடர்ந்து உள்ளூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கியது. இருப்பினும், இந்த தாக்குதலை நடத்தியவர் அல்லது குற்றம்சாட்டப்பட்ட நபரின் விபரங்களை ஸ்ரீவஸ்தவா மறுத்துவிட்டார். இது தொடர்பாக இதுவரை வருமான வரித்துறை, அரசு துறைகள் அல்லது காவல்துறையில் எந்த புகாரும் பதிவாகவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவத்தை மையமாக வைத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக தலைமையிலான மாநில அரசை கிண்டல் செய்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இதுவரை பாஜக அரசில் காவலருக்கு எதிராக காவலர் என்ற நிலை இருந்தது.
இப்போது அதிகாரி எதிராக அதிகாரி என்று நிலை மாறியுள்ளது. லக்னோவில் ஒரு ஐ.ஆர்.எஸ் அதிகாரி, மற்றொரு வருமான வரித்துறை பணியாளரால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். தாக்குதலுக்கு ஆளான ஐ.ஆர்.எஸ் அதிகாரியின் மனைவி ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருக்கிறார். அப்படி இருந்தும் அவரது கணவருக்கு இப்படி ஒரு சம்பவம் எப்படி நடந்தது? இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.