சிங்கப்பூர்: பிரதமர் மோடி புருனே, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். பயணத்தின் முதற்கட்டமாக நேற்று முன்தினம் புருனே சென்றடைந்த அவர், அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் நேற்று சந்தித்து பேசினார். இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மருந்துகள், திறன் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததோடு, பரஸ்பர பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இரு தலைவர்களும் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் கண்டித்ததோடு, எந்த நாடும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் மோடி கூறுகையில், ‘‘140 கோடி இந்தியர்கள் சார்பாக சுல்தான் ஹசனலுக்கும், புருனே நாட்டு மக்களுக்கும் 40வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல இந்தியா, புருனேவும் 40 ஆண்டு கால உறவை கொண்டாடுகின்றன. நாம் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்கிறோம். எனது வருகையும் கலந்துரையாடல்களும் எதிர்வரும் காலங்களில் நமது உறவுகளுக்கு நலம் பயக்கும் வழிகாட்டலை வழங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்திய பசிபிக் பார்வையில் புருனே முக்கிய பங்குதாரராக உள்ளது. எனது புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது. வலுவான இந்தியா-புருனே உறவுகளின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது’’ என்றார்.
இதனையடுத்து, புருனே பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றடைந்தார். இது பிரதமர் மோடியின் 5வது சிங்கப்பூர் பயணமாகும். சிங்கப்பூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டு உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் வரவேற்றார். சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் பல்வேறு தொழில் அதிபர்களை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார். குறிப்பாக சிங்கப்பூருடன் இணைந்து செமி கண்டக்டர் உற்பத்தியில் இந்தியா ஈடுபடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன. சிங்கப்பூர் வந்தடைந்ததும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்தியா-சிங்கப்பூர் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சந்திப்புகளை எதிர்நோக்குகிறோம். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களும் நமது இளைஞர் சக்தியும் முதலீடுகளின் சிறந்த இலக்காக இந்தியாவை மாற்றுகிறது’’ என குறிப்பிட்டார்.