டெல்லி: 3 நாட்கள் அரசு முறை பயணமாக புருனே, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். இந்தியாவுக்கும் புருனை தருஸ்ஸலாமுக்கும் இடையிலான அரசுசார் உறவுகள் 10 மே 1984-ல் நிறுவப்பட்டன. நடப்பு ஆண்டு இரு நாடுகளின் அரசுசார் உறவுகளின் 40-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. கலாச்சாரத் தொடர்புகளின் அடிப்படையில் இந்தியாவும் புரூனையும் இணக்கமான மற்றும் நட்பு உறவுகளைப் பேணி வருகின்றன. இந்நிலையில் புருனே நாட்டுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
இன்று புருனே செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, இந்தியா – புரூணேய் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர். இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், இந்தியா – புரூணேய் இடையே விண்வெளித் துறையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது. புருனே நாட்டிற்கு அரசுமுறை பயணமாக செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.
புருனே பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் 2 நாட்கள் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூரின் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூரில் தொழில் மற்றும் வணிகத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.