திசையன்விளை: நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்துள்ள அப்புவிளை அருகேயுள்ள காரம்பாடு கிராமத்தில் உள்ள ஓடைக்கரை சுடலை மாடசாமி கோயிலில், கடந்த 16ம் தேதியன்று கொடை விழாவில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன் – தம்பிகளான மதிராஜன் (37), மதியழகன் (43) ஆகியோர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். மற்றொரு சகோதரரான மகேஸ்வரனும் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் பச்சைமால் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து இவ்வழக்கில் தொடர்புடைய இதே ஊரைச் சேர்ந்த முருகேஷ்வரி மகன்கள் விபின் (27), ராஜ்குமார் (28), வருண்குமார் (27), அஜித்குமார் (27), 17 வயதுள்ள கல்லூரி மாணவர் மற்றும் முருகேஷ்வரி (54), இவரது மருமகளும் ராஜ்குமாரின் மனைவியுமான திவ்யா (25) உட்பட 7 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே விபின், ராஜ்குமார், வருண்குமார், அஜித்குமார் உட்பட கைதான 7 பேரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘காரம்பாடு கிராமத்தில் யார் பெரியவர்கள் என்பதிலும் அங்கு நடைபெறும் கோயில் கொடை விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக மதியழகன் குடும்பத்திற்கும், எங்களது (ராஜ்குமார்) குடும்பத்திற்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு எங்களுக்கும் மதியழகன் மற்றும் அவரது சகோதர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கோயில் கொடையின் போது அவர்களை தாக்குவதற்கு நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் கொடை விழாவில் எங்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் எங்களது குடும்பத்தை பற்றி அவர்கள் அவதூறாகவும், கேவலமாகவும் பேசியதால் கத்தியால் அவர்கள் சகோதரர்கள் 3 பேரையும் குத்தினோம். இதில் மதிராஜன், மதியழகன் ஆகிய 2 பேர் இறந்தனர்’. இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.