சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த சீராய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடந்தது. இதில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உள்துறைக்கு பணியமர்த்தம் செய்யப்பட்ட 11 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பின் இதுவரை 2,005 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இதன் எண்ணிக்கையை 2,500க்கு மேல் உயர்த்துவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் ரூ.6,703 கோடி மதிப்புள்ள 6,853.14 ஏக்கர் சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, 1,72,302 ஏக்கர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.5,372.72 கோடி மதிப்பில் 20,252 பணிகள் நடந்து வந்தன. இவற்றில் அரசு நிதி மற்றும் கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளில் 4,309 பணிகளும், உபயதாரர் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளில் 4,422 பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக உபயதாரர்கள் மட்டும் ரூ.1,059.58 கோடி மதிப்பிலான 8,819 பணிகளை செய்து வருகின்றனர். இது இந்த அரசின் மீதும் துறையின் மீதும் உபயதாரர்கள் வைத்துள்ள நன்மதிப்பையும், அவர்களின் எண்ணம் முழுமையாக ஈடேறுகிறது என்ற நம்பிக்கையை காட்டுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகிறது. அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும் என்பதற்காகவே நாங்கள் கிறிஸ்துமஸ், ரம்ஜான், மகாவீர் ஜெயந்தி, ஹோலி பண்டிகை என அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறோம். இந்த ஆட்சி சாதி, மத, இன, மொழி உணர்வுகளை கடந்து அனைத்து மதத்தினரும் வழிபடுகின்ற உரிமையை பெற்று தருகிற ஆட்சியாக திகழ்ந்து வருகிறது. ஆன்மிக அன்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையில் புதிய திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.