Friday, December 6, 2024
Home » 4 தலைமுறைக்கு முன்னால் உள்ள உறவின் அடிப்படையில் அண்ணன்-தங்கை உறவுமுறை உள்ளவர்கள் காதல் திருமணம்: ஆட்கொணர்வு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறிவுரை

4 தலைமுறைக்கு முன்னால் உள்ள உறவின் அடிப்படையில் அண்ணன்-தங்கை உறவுமுறை உள்ளவர்கள் காதல் திருமணம்: ஆட்கொணர்வு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறிவுரை

by Mahaprabhu

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தனது மகளை மீட்டு ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், என்னுடைய மகள் பிளஸ் 2 படித்துள்ளார். அவள் என்னுடைய பெரியப்பா மகள் வழி அக்காவின் மகனுடன், அதாவது சகோதர முறை கொண்டவனோடு காதல் வயப்பட்டு வீட்டை விட்டு ஓடி விட்டாள். இதுகுறித்து மகளிர் போலீசில் புகார் செய்தேன். அவர்கள் பிடித்து வந்து விசாரித்தார்கள். பின்னர், குழந்தைகள் காப்பகத்தில் அடைத்தனர். சில நாட்களுக்கு பின் வீடு திரும்பியவள் மீண்டும் கடந்த செப்டம்டர் 3ம் தேதி சகோதரனுடன் ஓடி விட்டாள். திருமணமும் செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். அவர்களால் எனது மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி என்னிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சேலம் போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, அந்த பெண், நாங்கள் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்கிறோம் என்றனர். அப்போது, நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, இந்து திருமணச் சட்டத்தின்படி சகோதர சகோதரி உறவு கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்ய முடியாது. அதற்கு சட்டம் தடை விதிக்கிறது என்றார். இதுகுறித்து நீதிபதிகள் அந்த பெண்ணிடம் கேட்டபோது, இருவரும், தாங்கள் 4 தலைமுறைக்கு முன்புள்ள உறவின் அடிப்படையில்தான் அண்ணன்-தங்கை உறவு வரும். 4 தலைமுறைக்கு முன்புள்ள உறவுக்கு திருமணச் செய்ய திருமணம் சட்டம் தடை விதிக்கவில்லை என்று விளக்கம் அளித்தனர். அப்போது, நீதிமன்றத்தில் நின்றுகொண்டிருந்த அந்த பெண்ணின் தாய் மகளின் காலில் விழுந்து தன்னுடன் வருமாறு அழுது மன்றாடினார்.

அண்ணனை திருமணம் செய்தால் ஊரே சிரிக்கும். அவமானம் தாங்காமல் நான் தற்கொலை செய்யத்தான் வேண்டும் என்றார். ஆனால், அந்த பெண் அதை கேட்காமல், ‘சாக வேண்டுமானால் சாவு’ என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகளும், அப்போது நீதிமன்றத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் மகள் சட்டவிரோத காவலில் இல்லாததால், இந்த ஆட்கொணர்வு வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். பின்னர் அந்த தம்பதியிடம், உங்கள் விருப்பம் போல் நீங்கள் வாழ்ந்து கொள்ளுங்கள். ஆனால், உங்கள் திருமணம் சட்டப்படி செல்லாது என்று கூறி அனுப்பி வைத்தனர். போலீசாரிடமும், அந்த பெண்ணின் தாயாரிடமும், இனி இவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். நீதிமன்றத்தில் இருந்தவர்கள் இந்த வழக்கை பார்த்து இப்படியும் நடக்குமா என்று வேதனையுடன் பேசிக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

19 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi