சிவகங்கை: ஆடு திருட வந்ததாக கூறி அண்ணன், தம்பி இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை அருகே கட்டாணிபட்டியை சேர்ந்த செல்வம் மகன்கள் மணிகண்டன் (30), சிவசங்கரன் (எ) விக்னேஷ்(25). இதில் மணிகண்டன் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விக்னேஷ் கல்லம்பட்டியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவகங்கை அருகே அழகமாநகரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தோப்பில், அப்பகுதியை சேர்ந்த சிலர் தொலைந்து போன மாடு ஒன்றை தேடி சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் ஆடு, கோழி சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசை நோக்கி சென்றபோது, தோப்பிற்குள் மணிகண்டன், சிவசங்கரன்(எ) விக்னேஷ் இருவரும் இருந்துள்ளனர். இதையடுத்து மாடு தேடி சென்றவர்கள் மற்றும் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி கிராம மக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் ஆடு, கோழி திருட வந்ததாக கூறி பயங்கரமாக தாக்கினர். தப்பித்து ஓட முயற்சி செய்தபோது, மேலும் பலமாக தாக்கியதில் இருவரும் சுருண்டு கீழே விழுந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் சிறிது நேரத்தில் இறந்தனர். ஆடு, கோழி திருட வந்ததாக தவறாக எண்ணி தாக்கப்பட்டனரா அல்லது முன்பகை காரணமா என்பது குறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்து சிவகங்கை எஸ்பி ஆசிஷ்ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி(45), சோமராஜ்(31), பிரபு(30), தீபக்(19), விக்னேஸ்வரன் (31), தினேஷ்(31) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர்கள் மீது கடந்த 2015ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலவளவு போலீஸ் ஸ்டேஷனில் ஆடு திருடியதாக வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சகோதரர்கள் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.