சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணனுக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெயலலிதாவுக்கு கார் டிரைவராக இருந்த கனகராஜ் இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்டார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் ஆத்தூர் அருகே நடந்த விபத்தில் சிக்கி மர்மமான முறையில் பலியானார். இந்த வழக்கில் அவரது அண்ணன் தனபால் ஆதாரங்களை அழித்ததாக கைது செய்யப்பட்டார்.
தற்போது, இந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு முக்கியமான காரணம் யார் என்பது குறித்து அவர் வெளிப்படையாக கூறி வருகிறார். இதையடுத்து கடந்த 14ம் தேதி கோவையில் சிபிசிஐடி முன்பு ஆஜராகி 8 மணி நேரம் சாட்சியளித்தார். அப்போது இந்த கொள்ளையை செய்ய சொன்னது யார்? யாரெல்லாம் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது பற்றிய தகவலை அவர் தெரிவித்தார். கொள்ளையடித்து கொண்டு வரப்பட்ட ஆவணங்கள் யாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் தெரிவித்தார்.
கொள்ளையடித்த பிறகு கனகராஜூம் கூலிப்படை கும்பலின் தலைவனான சயானும் சேலம் வந்தனர். அவர்கள் தன்னிடம் என்னெல்லாம் சொன்னார்கள் என்பது பற்றிய விவரத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை மீண்டும் விசாரணைக்கு 26ம் தேதி சிபிசிஐடி போலீசார் அழைத்துள்ளனர். அதேபோல் நீதிபதியிடமும், தான் ரகசிய வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் சிபிசிஐடி போலீசார் செய்து வருகின்றனர். யாருடைய பெயரையெல்லாம் அவர் சொல்லி இருக்கிறாரோ அவர்களுக்கெல்லாம் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள சமுத்திரத்தில் உள்ள அவரது வீட்டில் தனபால் இருந்தபோது இன்று அதிகாலை 5 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. ஏற்கனவே அவர் ஆஞ்சியோ சிகிச்சை செய்துள்ளார். மேலும் இதயத்தில் 2 அடைப்புகள் இருப்பதாகவும் இதுபோன்று நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படியும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டவுடன் இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் இன்று காலை 10 மணியளவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.