Thursday, June 12, 2025
Home செய்திகள்Showinpage பிராட்வேயை மாற்றியமைக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்து

பிராட்வேயை மாற்றியமைக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்து

by Arun Kumar

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுகழகம் (TIDCO) இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் (CMAML), பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டடத்தை புதுப்பிப்பதற்கும், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் (Multimodal Facility Complex – MMFC) அமைப்பதற்குமான முக்கிய ஒப்பந்தம் Bridge and Roof Company (India) நிறுவனத்திற்கு ரூ.566.59 கோடி மதிப்பில்(GST தவிர்த்து) வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) சார்பாக சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் .எம்.ஏ.சித்திக், முன்னிலையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் Bridge and Roof Company (India) நிறுவனத்தின் பொறியியல் குழு பொது மேலாளர் சஞ்சய் பட்டாசார்யா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் திரு. வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., Bridge and Roof Company (India) நிறுவனத்தின் திட்ட மேலாண்மை இயக்குநர் திரு. ரவி குமார், பொது மேலாளர் திரு. டி.ரவி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் திரு. டி. லிவிங்ஸ்டோன் எலியாசர்(திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), தலைமை பொது மேலாளர் டாக்டர் டி. ஜெபாசெல்வின் க்ளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல் மற்றும் மேலாண்மை), திட்ட மேலாளர் திரு. ஜி. தணிகை செல்வன், சென்னைமெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்கலந்துகொண்டனர்.

இந்த முக்கியமான உட்கட்டமைப்பு திட்டம், சென்னை நகரின் இணைப்புத் திறனை மேம்படுத்துவதோடு பொருளாதார வளர்ச்சிக்கும், நகர வாழ்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் மூலம், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், வர்த்தக வளாகங்களுடன் இணைந்து அமையவுள்ளது.

இந்த பேருந்து முனையம் (அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளம்) 24 மாதங்களுக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதற்கு மேலே உள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் (Multimodal Facility Complex – MMFC) மற்றும் குறளகம் கட்டிடம் 30 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்;

* இந்த வளாகம், நகரத்தின் பல பகுதிகளிலிருந்து எளிதாக அணுகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது உயர் நீதிமன்றம் மெட்ரோ நிலையத்துடன் தடையில்லா ஒருங்கிணைப்பை வழங்கும் வகையில், நடைமேம்பாலம் (Foot Overbridges) மற்றும் சுரங்கப்பாதை வசதிகளுடன் அமைக்கப்படும்.

* இந்த திட்டத்திற்கான மொத்த பரப்பளவு 6.484 ஏக்கர். பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாக கட்டிடம் மொத்தம் 1,08,290.01 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இதில் இரண்டு அடித்தள நிலைகள், ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் அடங்கும்.

* புதுப்பிக்கப்படும் குறளகம் கட்டடம் மொத்தமாக 22,794 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவைக் கொண்டதாக இருக்கும். இதில் இரண்டு அடித்தள நிலைகள், தரைத்தளம் மற்றும் 9 மேல் தளங்கள் உள்ளன.

* இந்த திட்டத்தில், போக்குவரத்து வசதிகள் (Paratransit Facilities), சுரங்கபாதைகள், வெளிப்புற நடைபாதைகள் (External Foot Overbridges) மற்றும் உட்புற மூடப்பட்ட நடைபாதைகள் (Internal Covered Pathways) ஆகிய பிரத்யேக இடங்களும் அடங்கும், முழுத் திட்டத்திற்கும் மொத்தமாக 1,36,580.37 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும்.

போக்குவரத்து மற்றும் வணிக மையம்:

* MMFC கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் பேருந்து நிறுத்தங்கள் இடம்பெறும். மொத்தம் 73 பேருந்து நிறுத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன: (தரைத்தளத்தில் 36, MMFC-யின்முதல் தளத்தில் 23, மற்றும் குறளகத்தில் 14). இந்த வசதி ஒரே நேரத்தில் 3,250 பேர்பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* MMFC-யின் கட்டிடத்தில் இரண்டாவது முதல் எட்டாவது தளம் வரை அலுவலக இடங்கள்திட்டமிடப்பட்டுள்ளன. குறளகம் கட்டிடத்தில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்தில் சில்லறை வணிகஇடங்கள் அமைக்கப்படும், மூன்றாவது முதல் ஒன்பதாவது தளம் வரை அலுவலக இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. தடையில்லா பயணிகளின் சேவைக்காக ஒரு அடித்தளத்தில் பொதுவான குளிர்சாதன வசதியுடன்கூடிய நடைபாதை திட்டமிடப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடம் மற்றும் வசதிகள்:

* MMFC மற்றும் குறளகம் வளாகங்களில் மொத்தம் 433 கார்கள் மற்றும் 1174 இரு சக்கரவாகனங்களை நிறுத்தும் வகையில் விரிவான வாகன நிறுத்துமிட வசதிகள் இருக்கும். இரண்டு கட்டிடங்களிலும் இரண்டாவது அடித்தளத்தில் அடுக்கு வாகன நிறுத்துமிடம் இருக்கும். இந்த வளாகத்தில் 30 மின்தூக்கிகள் மற்றும் 27 நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். பல்வேறு தளங்களில் பிரத்யேக கழிப்பறை வசதிகள் வழங்கப்படும். இந்த திட்டத்தில் மின்சார பேருந்துகளை சார்ஜ் செய்வதற்கான வசதிகளும் அடங்கும்.

இந்த லட்சியத் திட்டம் சென்னையின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு பெரிய படியை குறிக்கிறது, நவீன வணிகமற்றும் அலுவலக இடங்களுடன் ஒருங்கிணைந்த உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து மையத்தை உறுதியளிக்கிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi