பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார். பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு லேபர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிட்டிருந்தனர். அவர்களுள் ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் போட்டியிட்ட தொகுதியில் 19,415 வாக்குகள் பெற்று உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முதல் தமிழர் என்ற சாதனையை படைத்துள்ளார் உமா குமரன். பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 8 தமிழர்கள் போட்டியிட்ட நிலையில், கவின் கரன், மயூரா செந்தில், தேவின்னா பால், நார்னி ரதர்ஃபோர்ட் ராஜன் ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர். கிழக்கு லண்டனில் பிறந்து வளர்ந்த உமா குமரனின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்களாவார். 1980 காலகட்டத்தில் நடைபெற்ற உள்நாட்டு போரின் காரணமாக இவரது குடும்பமும் உறவினர்களின் குடும்பங்களும் பல்வேறு நாடுகளில் குடியேறி உள்ளதாக தெரிவித்துள்ளார். ‘புரட்சி என்னுடைய ரத்தத்தில் கலந்துள்ளது’ எனக் கூறியுள்ள உமா குமாரன் கடந்த 15 ஆண்டுகளாக தொழிலாளர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், தோல்விக்குப் பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். விரைவில் மன்னர் சார்லசை சந்தித்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.