திருவனந்தபுரம்: கடந்த 14ம் தேதி திருவனந்தபுரம் அருகே கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து நாட்டின் எப்35 பி ரக போர் விமானம் எரிபொருள் குறைவு மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கடந்த 5 நாட்களுக்கு மேலாக இந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை கோளாறை சரிசெய்ய முடியாததால் இந்த விமானம் புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து போர் விமானம் விற்பனைக்கு இருப்பதாக ஓஎல்எக்சில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. அதில் போர் விமானத்தின் படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்திலேயே இது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அது உண்மை அல்ல என்று பின்னர் விசாரணையில் தெரியவந்தது.