லண்டன்: உலகிலேயே அதிக ஊடக வெளிச்சத்துடன் வலம் வரும் பிரிட்டனின் புகழ்பெற்ற லாரி பூனைக்கு போட்டியாக புதிய பூனை வர இருக்கிறது. பிரிட்டன் பிரதமர் வசிக்கும் லண்டன் டௌனிங் தெருவில் அவ்வளவு எளிதில் யாராலும் நுழைந்துவிட முடியாது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் மனிதர்களுக்கு தானே நமக்கு என்ன என்று 13 ஆண்டுகளாக டௌனிங் தெரு, பிரதமர் இல்லம் என உலவி வருகிறது லாரி. தனது வாழ்நாளில் டேவிட் கேமரோன் முதல் கெய்ர் ஸ்டார்மர் வரை 6 பிரதமர்களை பார்த்துவிட்டது லாரி. தலைவர்களை பேட்டி எடுக்க வரும் செய்தியாளர்கள் லாரியின் குறும்புத்தனங்களை வெளியிட இதற்கென சமூக வலைத்தளப் பக்கம் தொடங்கும் அளவுக்கு இதன் புகழ் பரவி விட்டது.
லாரியை கௌரிவிக்கும் விதமாக இரண்டாம் எலிசபெத்தின் மறைவு செய்தியை மறைமுகமாக ‘லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்’ என அறிவித்ததை போல லாரி பிரிட்ஜ் என அறிவிக்க போகிறார்கள். இவ்வளவு பெருமை கொண்ட லாரிக்கு புதுப்போட்டி எழுந்துள்ளது. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது குழந்தைகளுக்காக ஜோஜோ என்ற சைபீரிய பூனைக்குட்டியை தனது இல்லத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஜோஜோ-வை லாரி எப்படி பார்க்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஜோஜோ-வை இணக்கமான சூழலில் லாரியுடன் அறிமுகம் செய்ய டௌனிங் தெரு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.