தீபாவளி அன்னிக்கு மணக்க மணக்க மட்டன் பிரியாணி சாப்டோமே… அந்த பிரியாணியோட டேஸ்ட்டுக்கு முக்கியக் காரணமா இருக்கற நம்ம பிரியாணி இலைக்கும் இந்த நோபல் ப்ரைஸுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு வேற சொல்றாங்க.வாங்க… பிரியாணி சாப்டுக்கிட்டே அதைப் பத்தியும், நம்ம பிரிஞ்சிங்கிற பிரியாணி இலையை பத்தியும் இன்னிக்குத் தெரிஞ்சுக்கலாம்..!நம்ம அனைவருக்கும் பிரியமான பிரியாணி மற்றும் குருமாவில் சுவை மற்றும் மணத்தைக் கூட்டும் பிரிஞ்சி இலை அல்லது பிரியாணி இலைக்கு, லவங்கப்
பத்திரி, மசாலா இலை, மலபார் இலை, தேஜ்பட்டை என்ற பெயர்களும் ஆங்கிலத்தில் Bay Leaf, Sweet bay, Grecian laurel என்ற பெயர்களும் உள்ளன. இதன் தாவரப்
பெயரோ Laurus nobilis. இது தோன்றிய இடம் மத்திய தரைக்கடல் நாடுகள்.
உண்மையில், ‘Bay Laurel’ என்ற சிறுமரத்திலிருந்து கிடைக்கப்பெறும் இந்த மணம் மிக்க பே-லீஃப் இலைகளைப் போலவே சற்று காரம் மிகுந்த கலிஃபோர்னியா பே-லீஃப், மெக்சிகன் பே-லீஃப்,
இந்தியன் அல்லது ஃபிலிப்பினோ பே-லீஃப் மற்றும் கரீபியன் பே-லீஃப் ஆகியனவும் உலகெங்கும் பயன்பாட்டில் உள்ளன என்றாலும், இவற்றிற்கு முன்னோடியான Bay Laurel இலைகளைப் பற்றி, குறிப்பாக அவற்றின் மருத்துவ குணங்களையும் பயன்களையும் தெரிந்துகொள்வோம். அதற்கு முன், ஒரு முக்கிய வரலாற்றுத் தகவலையும் தெரிந்துகொள்வோம். உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசைப் பெறும் மகத்தான விருதாளர்களை நோபல் லாரியட்ஸ் (Nobel Laureates) என அழைப்பது எதனால் தெரியுமா..?
பண்டைய கிரேக்க வரலாற்றின்படி, சூரியக் கடவுளான அப்போல்லோ, டாஃப்னே எனும் பெண் பாதிரியின் மீது காதல் வயப்பட்டு, அவளை அணுக முயற்சிக்க, கயா எனும் அன்னை பூமி, டாஃப்னேயை அங்கிருந்து வெளியேற்றி, அவள் இருந்த இடத்தில் இந்த லாரல் எனும் பே-லீஃப் மரத்தை நட்டுச் சென்றதாகவும், அந்த லாரல் இலைகளை மாலையாக அணிந்து, அப்போல்லோ
தன்னைத்தானே தேற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்போல்லோவின் கோவிலான டெல்ஃபி கோவிலில் பே-லீஃப் இலைகளே வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதுடன், பக்தி, தூய்மை, தியானம், ஞானம், கூர் அறிவு, படைப்புத்திறன் ஆகியவற்றையெல்லாம் இந்த இலைகள் வழங்கும் என்று இன்றும் நம்பப்படுகிறது.
காதல் மற்றும் பக்தியின் சின்னமாக மட்டுமன்றி, இந்த பே-லீஃப் இலைகள் வெற்றியைக் கொண்டாடவும், செல்வத்தைக் குறிக்கவும், அமைதியைக் குறிக்கவும், அதிர்ஷடத்தைக் கொடுக்கவும், துர்சக்திகளை விரட்டவும் தலையில் கிரீடம் (Head band) போலப் பயன்படுத்தப்பட்டன என்று கிரேக்க மற்றும் ரோமானிய வரலாறுகள் கூறுகின்றன. பே-லீஃப் இலைகளைத் தலையணைக்கு கீழே வைத்தால் படைப்பாளி ஆகலாம் என்றும் கூட நம்பப்பட்டுள்ளது. ஏன்… சமீப நாட்களில், கடன் தொல்லை நீங்க, பிரியாணி இலையில் கடன் தொகையை எழுதி உங்கள் பீரோவில் வைத்தால் கடன் நீங்கும் என்பது போன்ற மீம்ஸ் வலம் வருவதைக்கூட பார்த்திருப்போம்.
உண்மையில், Baccalaureate என்ற இந்த பே-லீஃப் கிரீடம்தான், இலக்கியச் சாதனையாளர்களுக்கு, ‘Poet laureate’ என்ற பெயரில் அந்நாட்களில் வழங்கப்பட்டதாம். பின்பு உலகெங்கும் பண்டிதர்கள், வீரர்கள், படைப்பாளர்கள், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் என பல துறைகளின் வெற்றியாளர்கள் அனைவரும் Laurels என அழைக்கப்பட, ‘Nobel Laureate’ என்ற நோபல் விருதாளர்கள் பெயர் தோன்றியதும் கூட அப்படி இந்த பே-லீஃப் கிரீடத்திலிருந்துதான் எனப்படுகிறது. இவ்வளவு வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த பே-லீஃப் இலைகள், உண்மையில் அவற்றின் மண் மணம் மற்றும் பிரத்யேக கசப்புடன் கூடிய காரத்தன்மையால் உணவுகளின் சுவையூட்டியாகப் பயன்படுவது மட்டுமன்றி, அவற்றின் அதீத மருத்துவ குணங்களாலும் பெரிதும் கொண்டாடப்படுகின்றன.
பே-லீஃப்பின் பச்சை இலைகளில் அதிக நார்ச்சத்து (94%), குறைந்தளவு மாவுச்சத்து (27%), குறைந்தளவு கொழுப்பு (11%) காணப்படுவதுடன், வைட்டமின்கள் ஈ, பி, சி மற்றும் ஏ, அவற்றுடன் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், காப்பர், செலினியம் மற்றும் இரும்புச்சத்து ஆகிய தாதுக்களும் நிறைந்துள்ளன. மேலும், இந்த இலைகளில் உள்ள டானின்கள், ஆந்த்தோ-சயனின்கள், ஃப்ளேவனாயிட்கள் உள்ளிட்ட ஃபைட்டோ-ஆக்சிடென்ட்கள், அவற்றின் ஆன்டி-ஆக்சிடென்ட் மற்றும் ஆக்சிஜனேற்ற செயல்பாடுகளாலும், நச்சுகள் வெளியேற்றம், செல் அழற்சிக் கட்டுப்பாடு மற்றும் நோயெதிர்ப்புத்திறன் ஆகியவற்றாலும் நமது உடல் ஆரோக்கியத்தை பலவிதமாக காக்கின்றன.
அத்துடன் இந்த இலைகளில் உள்ள பைனீன் (Pinene), இயூஜினால் (Eugenol), பாலிஃபீனால் (Polyphenol), யூகலிப்டால் (Eucalyptol), மிர்சீன் (Myrcene) போன்ற ஆவியாகும் எண்ணெய்கள் உணவிற்கு மணம் சேர்ப்பதுடன், வெளிப்பூச்சாகவும், வாசனை திரவியமாகவும், அரோமா தெரபியிலும் உதவுகிறது. இதில் பே-லீஃப்பின் முதிர்ந்த பச்சிலைகளில் வாசனை எண்ணெய்கள் அதிகமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வியக்கத்தக்க சத்துகள் நிறைந்த இந்த பே-லீஃப் என்கிற பிரியாணி இலைகள் சர்க்கரை நோய், இதய நோய், அதிக கொலஸ்ட்ரால், ஆஸ்துமா, மூட்டு நோய், பற்சிதைவு, குடல் அழற்சி, சிறுநீரக கற்கள், மன அழுத்தம், இறுதியாக கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்களுக்கு எதிராகவும், அதேசமயம் நுண்கிருமிகளால் ஏற்படும் நோய்த் தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கிறது. இதன் வாசனை எண்ணெய், வலி நிவாரணம், விஷ முறிவுத் தன்மை, சருமப் பாதுகாப்பு, அழகு சாதனம், அரோமா தெரபி என பல வகையாகப் பயன்படுகிறது.
பிரியாணி இலைகளை, ஊதுபத்தி போல எரித்தால், அதன் புகையில் வெளியேறும் Linalool மன அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தை உண்டாக்குகிறது என்றும், அதன் Myrcene மற்றும் Eugenol மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியைத் தருகிறது என்றும் நன்மைகளை அடுக்குகிறது மருத்துவ அறிவியல். அதேசமயம், நாம் பொதுவாகப் பயன்படுத்தும் உலர்ந்த இலைகளில் கலோரிகளோ, வைட்டமின்களோ, இதரச் சத்துகளோ இருப்பதில்லை என்பதால் அவற்றிற்கு மருத்துவ குணங்கள் சற்றுக் குறைவாகவே காணப்படுகின்றன. என்றாலும், இந்த இலைகளில் உள்ள ஆவியாகும் எண்ணெய்கள், பிரியாணி இலையின் மணம் மற்றும் சுவையை அப்படியே வழங்குகிறது. சிலருக்கு இந்த பே-லீஃப் இலைகள் ஒவ்வாமையை (allergy) ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், மிகினும் நோய் உண்டாக்கும். அதாவது, அதிகப்படியான பிரிஞ்சி இலைகள் வயிற்றில் அழற்சியையும், நுரையீரல் நோயையும், மயக்க நிலையையும் உண்டாக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நமது அன்றாட சமையலின் முக்கிய அங்கமான கரம் மசாலாவிலும் இந்த இலைகள் சேர்க்கப்படுகின்றன. பொதுவாக பச்சையாகவும், உலர்ந்த பின்பும், பொடி செய்யப்பட்டும் பே-லீஃப் உணவில் உபயோகப்படுத்தப்படுவதுடன், இதன் உலர்ந்த இலைகளை, வெயில் படாத இடத்தில், ஈரத்தன்மை இல்லாத, காற்று புகாத ஜாடிகளில் ஒரு வருடம் வரை கூட சேமிக்கலாம். அதேபோல, மெனூடோ, பீஃப் பாரேஸ் போன்ற ஃபிலிப்பினோ உணவுகளிலும், மெடிட்டெரேனியன், இத்தாலியன் மற்றும் ஃப்ரெஞ்சு உணவுகளிலும் பே-லீஃப் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் ஆப்பிரிக்க, தென் அமெரிக்க மற்றும் அரபு நாடுகளில், கசப்பான சுவையும், பிரத்யேகமான மணமும் நிறைந்த பச்சை இலைகள் சூப் அல்லது தேநீராக அருந்தப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடையே வலம் வரும் இந்த பே லீஃப் மற்றும் அதன் பே லாரல் மரங்களை அதிகம் விளைவித்து அதிகளவில் ஏற்றுமதி செய்வது துருக்கி, சிரியா மற்றும் ஸ்பெயின் நாடுகள். மரத்தண்டுகளிலிருந்து பயிரிடப்படும் இந்த பே லாரல் மரங்களுக்கு அதிக சூரிய சக்தியும், காற்றும், அளவான நீரும், வளமான மண்ணும் தேவைப்படுகிறது. ஓரிரு வருடங்கள் கழித்து, இதன் இலைகள் பயனுக்கு வருகிறது என்பதுடன், அடுத்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகவும் இது பயனளிக்கிறது.
இந்த சிறு மரங்களை வளர்ப்பது உண்மையில் ஒரு தனிக் கலை என்று கூறும் வேளாண் வல்லுநர்கள், இந்திய பே லீஃப் மரங்கள் அதிகப்படியாக சிக்கிம், மேகாலயா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் பயிரிடப்படுகின்றன என்றும், இவற்றின் பெரும் உற்பத்தி நேபாளம், மியான்மர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் கூறுகின்றனர். ஆக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த பே-லீஃப் எனும் பிரிஞ்சி இலைகள் நமக்குக் கடன் தொல்லையை நீக்காவிட்டாலும், நோபல் பரிசைத் தராவிட்டாலும், நிச்சயமாக நல்லதொரு உணவை தருவதுடன் பல நன்மைகளையும் சேர்த்தே தருகிறது.. ‘‘No spice collection at home is complete without Bay Leaves…” என்பது பிரியாணி இலைகளை பொறுத்தமட்டிலும், மறுக்க முடியாத உண்மைதான்..!
(இயற்கைப் பயணம் நீளும்..!)
மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்: டாக்டர் சசித்ரா தாமோதரன்