தோகைமலை: ஒரு எக்டேருக்கு 200 கிராம் விதை போதுமானது, 50 டன் கத்தரிக்காய் மகசூல் கிடைக்கும். 120 நாட்களில் அறுவடை செய்யலாம் என்பதால் கடவூர், தோகைமலை விவசாயிகள் கத்தரி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கத்தரிக்காய் சாகுபடியில் வறட்சியை தாங்கி வளரும் பயிராகும். கோ 1, கோ 2, எம்டியு 1, பிகேஎம் 1, பிஎல்ஆர் 1, கேகேஎம் 1, அண்ணாமலை, கோபிஎச் 1, (வீரய ஒட்டு ரகம்) அர்கா நவனீத், அர்கா கேசவ், அர்கா நிரி, அர்கா சிரீஸ் மற்றும் அர்கா ஆனந்த் ஆகிய ரகங்கள் உள்ளது.டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் தொடங்கி மே மாதம் வரை பயிரிடுவதற்கு நல்ல பருவ மாதங்கள். நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் அமைந்த நிலங்கள் கத்தரி பயிரிடுவதற்கு ஏற்றாகும்.
ஒரு எக்டேருக்கு 200 கிராம் விதை போதுமானது. விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை உயரமான பாத்திகளில் 10 செ.மீ இடைவெளியில் அரை அங்குளம் ஆழத்திற்கு கோடுகள் இட்டு அதில் விதைகளை பரவலாக தூவ வேண்டும். விதைகளை விதைத்த பின்பு மணல் இட்டு மூடி உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.கத்தரி நடவு செய்து 3ம் நாளில் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொட ர்ந்து 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். மழை காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கத்தரி நடவு செய்த 15 முதல் 20 நாட்களில் செடிகளின் குனித் தண்டுகள் இலையுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். இவைகளை கிள்ளி உள்ளே பாத்தால் வெள்ளை நிறப் புழு காணப்படும். இது காய்களை குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்துகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட செடிகளின் நுனித்தண்டினை கிள்ளி எறிந்துவிட வேண்டும். பாதிக்கப்பட்ட காய்களை பறித்து அழிக்க வேண்டும்.
கார்பரில் 50 சதவீதம் தூளை 1 லிட்டருக்கு 2 முதல் 4 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். காள்களை தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை குயினால்பாஸ் 25 இசி 2 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேப்பெண்ணெய் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது எண்டோசல்ஃபான் 2 மில்லியை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இதேபோல் கோடைகாலப்பயிரில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகமாக இருக்கும். கட்டுப்படுத்துவதற்கு ஒரு எக்டேருக்கு மஞ்சள் நிற ஒட்டும் பசை அட்டைப்பொறி 12 வைக்க வேண்டும்.
வேப்பெண்ணெய் 3 மில்லியுடன் 1 லிட்டர் நீர் கலந்து அதில் டீப்பால் என்ற ஒட்டும் திரவம் 1 மில்லியுடன் 1 லிட்டர் தண்ணீரில் கலக்கப்பட்ட கலவையுடன் சேர்த்து தெளிக்க வேண்டும். சாம்பல் மூக்கு வண்டுகளை கட்டுபடுத்துவதற்கு ஒரு எக்டேருக்கு கார்போஃபியூரான் 15 கிலோவை செடி நட்ட 15 நாட்களுக்கு பிறகு செடிகளின் வேர் பகுதியில் இட வேண்டும். எனவே மேற்படி முறைகளை பின்பற்றி விவசாயிகள் சாகுபடி செய்யதால் 50 முதல் 120 நாட்களுக்கு நல்ல மகசூலுடன் அறுவடை செய்யலாம். இதில் ரகங்களுக்கு ஏற்ப அறுவடை நாட்கள் மாறுபடும் என்ற போதிலும், வீரிய ஒட்டு ரகத்தில் ஒரு எக்டேருக்கு 40 முதல் 50 டன்கள் வரை மகசூல் கிடைக்கிறது.