புதுடெல்லி: மேற்கத்திய நாடுகளின் செல்வாக்குக்கு மாற்றாக, வளரும் நாடுகளின் குரலாக ஒலிக்கும் நோக்கில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் கடந்த 2009ம் ஆண்டில் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் தென்னாப்பிரிக்கா இணைந்தது. அதன்பின் 2023ல் நடைபெற்ற மாநாட்டில் இந்த கூட்டமைப்பை விரிவுபடுத்தும் விதமாக எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் இணைக்கப்பட்டன.
இந்த விரிவாக்கம், கூட்டமைப்பின் உலகளாவிய செல்வாக்கை அதிகரித்தாலும், அதன் உறுப்பினர்களிடையே உள்ள கருத்தியல் மற்றும் அரசியல் வேறுபாடுகளால் ஒற்றுமை குறைந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க சீனா எதிர்ப்பு தெரிவிப்பது, பிரேசிலின் பசுமைக் கொள்கைகள் ரஷ்யா மற்றும் சவுதி போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளின் நிலைப்பாடுகளுடன் மோதுவது போன்ற உள்முரண்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இந்தச் சூழலில், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் தற்போதைய பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் முக்கியத் திருப்பமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது கால ஆட்சியில் முதன்முறையாக பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக சீனப் பிரதமர் லீ கியாங் கலந்துகொண்டுள்ளார். இதேபோல், உக்ரைன் போர் தொடர்பான போர்க்குற்றங்களால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புடினுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளதால், அவரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கவில்லை; அவர் காணொலி மூலம் இம்மாநாட்டில் இணைகிறார்.
உலகின் இருபெரும் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்காத நிலையில், இந்தியப் பிரதமர் மோடி இந்த மாநாட்டின் மையப் புள்ளியாக உருவெடுத்துள்ளார். பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கும் மோடிக்கு, பிரேசில் அரசு சிறப்பு அரசுமுறைப் பயணத்திற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்த மாநாட்டில், வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைப்பது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.