ஊட்டி : ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் உள்ள பிரிக்ஸ் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
ஊட்டி நகரில் பிரிக்ஸ் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இப்பள்ளியின் கௌரவ தலைவராக நீலகிரி மாவட்ட கலெக்டர் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த பள்ளி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த ஆண்டு இப்பள்ளியில் திருப்புதல் தேர்வு நடத்தாத நிலையில் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, மருத்துவ விடுப்பு, சாதாரண விடுப்பு உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்து வந்தனர். நேற்று மாலை ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றி வருகிறோம்.
கடந்த 7 ஆண்டுகளாக எங்களுக்கு ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சலுகைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகளாக அந்த சமயங்களில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
ஆனால் இதுவரை எங்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இதனால் பள்ளி வேலை நேரம் முடித்த பின்பு தற்போது உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் இந்த போராட்டம் தொடரும்’’ என்றனர்.