செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் யுவராஜ் தலைமை தாங்கினார். இதில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிந்த, பெருவாரியான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய கட்டுமானத்துறையை வளர்த்தெடுக்க எந்த அறிவிப்பையும் ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் வெளியிடவில்லை.
தங்கம் வைரம் பிளாட்டினம் போன்ற பொருட்களுக்கு இறக்குமதி வரியைக் குறைத்து அறிவித்துள்ள நிதி அமைச்சர் கட்டுமானப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி அல்லது கட்டுமானத்திற்கான ஜிஎஸ்டி வரியை குறைத்திட எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கட்டுமானத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்குக் அதிகபட்ச 28 சதவீதம் ஜிஎஸ்டி ஆகும். எனவே, ஜிஎஸ்டியை 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும் உள்ளிட்ட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநில இணை செயலாளர்கள் சிங்கை கணேஷ், பானுகோபன், மாநில துணை தலைவர்கள் சிதம்பரேஷ், முனீர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.