மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகள் என கிராமங்கள் முழுவதும் காணும் இடமெல்லாம் அதிக எண்ணிக்கையில் குட்டிப் போட்டு தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. தெரு நாய்களால் உருவாகும் ரேபிஸ் எனும் மிகக்கொடிய வைரஸ் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அதன் விளைவுகள் மிக கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நோயால், பாதிக்கப்பட்ட நாய் கடிப்பதால் பெரியோர், இளைஞர், பள்ளி சிறுவர், கல்லூரி மாணவர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ரேபிஸ் வைரஸ் தொற்று ஏற்படும். ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நாயால் கடிபட்ட மனிதர்களை தனிக்கூண்டில் அடைத்து வைத்து சிகிச்சை அளிப்பர். இருப்பினும், அவர்கள் ரேபிஸ் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து மீள்வது கேள்விக்குறியாகவே உள்ளது.
பொதுவாக, ரேபிஸ் பாதிக்கப்பட்டுள்ள நாய் கடித்தால் மட்டுமே நோய் பரவும் என்றில்லை. பாதிக்கப்பட்ட நாயின் எச்சில் பட்டாலும், நகத்தால் கீறினாலும் ரேபிஸ் தொற்றுநோய் பரவலாம். நம் உடலில் சிறு காயம் இருந்து அதில் ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாயின் எச்சில் பட்டாலும் வைரஸ் தாக்கும். இவ்வளவு, மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ரேபிஸ் நோயில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு, எந்த நாய் கடித்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், பலர் இதில் கவனம் செலுத்துவதில்லை. நாய் லேசாகத் தான் கடித்தது என பாதிப்பின் அபாயநிலையை உணராமல் இருந்து விட்டால் அவர்கள் குடும்பத்தினரே அவர்களை ஒதுக்கிவைக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
மிக ஆபத்தான ரேபிஸ் பரவலுக்கு அடிப்படை காரணமாக இருப்பது தெரு நாய்கள் தான். இவற்றை, கட்டுப்படுத்த எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும், கட்டுப்படுத்தாத நிலையே பரவலாக காணப்படுகிறது. இதனிடையே, மாமல்லபுரம் பேரூராட்சி தற்போது நகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. நகராட்சி முழுவதும் உள்ள 15 வார்டுகள், கொக்கிலமேடு, மணமை, கடம்பாடி, வடகடம்பாடி, காரணை, குழிப்பாந்தண்டலம், எச்சூர், பட்டிப்புலம், நெம்மேலி, வட நெம்மேலி, திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளில் தெருவுக்கு 10 நாய்கள் வீதம் சுற்றித்திரிகின்றன.
இதனால், வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோர் மட்டுமின்றி வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளையும் தெருநாய்கள் ஒன்று சேர்ந்து விரட்டுகின்றன. குறிப்பாக, கிராமப் பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன. இதேபோல், மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சியில் அடங்கிய பல்வேறு கிராமப் பகுதிகளிலும் தெரு நாய்கள் குட்டிப் போட்டு, அதிகளவில் இனப்பெருக்கம் செய்து கட்டுக்கடங்காமல் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
அப்படி, சுற்றித்திரியும் தெரு நாய்கள் பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களை கண்டால் கடிக்க துரத்துகிறது. இதனால், கிராம பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனும், உயிர் பயத்துடனும் நடமாட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக, மாமல்லபுரத்தில் பல்வேறு தெருக்களில் தெரு நாய்கள் சுற்றித் திரிந்து சுற்றுலாப் பயணிகளையும், பள்ளி-கல்லூரி மாணவர்களையும் துரத்தி துரத்தி கடிக்கிறது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்ல பயப்படுவதாக கூறப்படுகிறது. மாமல்லபுரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சொறி பிடித்தும், முடிகள் கொட்டியும் பார்பதற்கு அறுவறுக்கும் வகையில் சுற்றித் திரிந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதாக அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர். எனவே, மாவட்டம் முழுவதும் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் தெருநாய்கள் சாலைகளில் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. நாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கிறது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்வதன் மூலம் நாய்களின் பெருக்கத்தை வருங்காலங்களில் கட்டுப்படுத்த முடியும்’ என்றனர்.
* 50 பேர் காயம்
மாமல்லபுரம் இசிஆர் சாலை, ஓஎம்ஆர் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் பொதுமக்கள் பைக்குகளில் செல்லும்போது திடீர், திடீரென நாய்கள் குறுக்கிடுவதால் பிரேக் போடும் போதும், நாய்களின் மீது ஏறி கீழே விழுந்தும் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
* குழு அமைக்க வேண்டும்
தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்களின் சார்பில் குழு அமைக்க வேண்டும். அந்த குழுவினர் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது, தடுப்பூசி செலுத்துவது போன்ற பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த, தகவல்களை மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
* நடமாடும் மருத்துவ குழு
நாய்க்கடியால் பாதிக்கப்படும் நபருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து, மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கி தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடமாடும் மருத்துவக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.