செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் கடந்த சில வாரங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு நகரில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தின் பின்புறத்தில் இருந்த பழமையான பூவரசன் மரம் வேரோடு சாய்ந்து சுற்றுச்சுவர் மீது விழுந்தது. இதில், சுற்றுச்சுவர் இடிந்து நொறுங்கியது.
இந்நிலையில், இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் சீரமைக்கப்படாமல் உள்ளது. சாலையோரத்தில் உள்ள கட்டுமான கழிவுகளால் அவ்வழியே செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களை மர்ம நபர்கள் எளிதாக திருடி செல்லும் சூழல் உள்ளது. எனவே, இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.