திருப்பூர்: திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகம் முன்பு நேற்று முன் தினம் இரவு திருமுருகன்பூண்டி சிறப்பு எஸ்ஐ மருதப்ப பாண்டியன் மற்றும் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு போலீஸ்காரர் குணசுதன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே காரில் சென்ற வாலிபர்களை சோதனை மேற்கொண்டனர். அவர்கள் போதையில் இருந்துள்ளனர்.
இதற்கு, அபராதம் விதித்தால் நீதிமன்றத்திற்கு சென்று கட்ட நேரிடும் என கூறி ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர். வாலிபர்கள் ரூ.5 ஆயிரம் தர முன்வந்தனர். பணம் இல்லாததால் போலீஸ்காரர் குணசுதனை காரில் அழைத்து சென்று அவிநாசியில் உள்ள வங்கி ஏடிஎம்மில் ரூ.7 ஆயிரம் எடுத்து கொடுத்துள்ளனர். மேலும், காரில் இருந்த பீர் பாட்டில்களையும் குணசுதன் பெற்றுள்ளார். விலை உயர்ந்த புளூடூத் ஹெட்செட்டையும் எடுத்து வைத்துள்ளார்.
இதை அறிந்து மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி விசாரணை மேற்கொண்டு, சிறப்பு எஸ்ஐ மருதப்ப பாண்டியன் மற்றும் போலீஸ்காரர் குணசுதன் ஆகியோரை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதேபோல், திருச்சி பொன்மலை சர்வீஸ் சாலையில் நேற்றுமுன்தினம் மாலை ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து காவலர் ஒருவர் அபராதம் விதித்தார். அப்போது, அந்த காவலரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம் புலிவலம் காவல் நிலைய போலீஸ்காரர் சந்தோஷ்குமார் என்பதும், அபராதம் விதிக்கும் கருவி பழுதானதால் சரிசெய்ய திருச்சி வந்த அவர், கருவி பழுதை நீக்கி விட்டு வழியில் மதுபோதையில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தது தெரிய வந்தது. தகவலின் பேரில் அவரை திருச்சி மாவட்ட ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றி மேலதிகாரிகள் உத்தரவிட்டனர்.