Tuesday, September 26, 2023
Home » ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

by Suresh

சேலம்: காணாமல் போன பத்திரத்திற்கு சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட மேச்சேரி இன்ஸ்ெபக்டர், டிரைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அரங்கனூரை சேர்ந்தவர் பிரபு. இவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் அரங்கனூரில் உள்ளது. இந்த நிலப்பத்திரங்களை வைத்து வங்கியில் கடன் வாங்க முடிவு செய்திருந்தார்.

இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டில் மேச்சேரியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு வந்து பத்திரங்களை நகல் எடுத்து கொண்டு, வீடு திரும்பினார். அப்போது, அவர் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள கடையில் பூ மாலை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிள் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்துள்ளார். அப்போது நிலப்பத்திரங்களை வைத்திருந்த பையை காணவில்லை. இது குறித்து மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். அப்புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் சண்முகம், நிலப்பத்திரம் காணவில்லை என்று சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை கொடுக்க விரும்பாத பிரபு, இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதில், தனது நிலப்பத்திரம் காணவில்லை. இது தொடர்பாக மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் புகார் அளித்தேன். ஆனால் அவர் ஒரு ஆண்டாக பத்திரம் காணவில்லை என்பதற்கு சான்றிதழ் தராமல், பல்வேறு காரணங்களை தெரிவித்து இழுத்தடித்து வந்தார். நீதிமன்ற உத்தரவு வாங்கி வரவேண்டும் என தெரிவித்தார். நானும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வாங்கி வந்து கொடுத்தேன்.

ஆனாலும், காணாமல் போன பத்திரம் தொடர்பாக சான்றிதழ் தர வேண்டுமானால் ரூ.25 ஆயிரம் தரவேண்டும் என தெரிவித்தார். எனது செல்போன் எண்ணுக்கு வந்து பணம் கேட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இன்ஸ்பெக்டரின் டிரைவர் போலீஸ்காரர் மனோஜ் விஜயன் இருந்துள்ளார். அவரும் பணம் கேட்டு வந்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இன்ஸ்பெக்டர் சண்முகம், அவரது டிரைவர் மனோஜ் விஜயன் ஆகியோர் காணாமல் போன பத்திரத்திற்கு சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ்காரர் மனோஜ் விஜயன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?