புதுடெல்லி: ரூ.25 லட்சம் லஞ்ச வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மூத்த ஐஆர்எஸ் அதிகாரி அமித் குமார் சிங்கலின் அலுவலகங்களில் சிபிஐ சுமார் ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் 3.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது. டெல்லி லா பினோஸ் பீட்சா உரிமையாளர் சனம் கபூரின் வருமான வரி பிரச்னையை தீர்க்க ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்டு, முதல் தவணையாக ரூ.25 லஞ்சம் பெற்ற புகாரில் வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்தில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரி அமித் குமார் சிங்கல் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரது டெல்லி மற்றும் பஞ்சாப் வீடுகள் மற்றும் அலுவலகத்திலும், அவரது கூட்டாளி ஹர்ஷ் கோட்டக்கின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ. 1 கோடி ரொக்கப்பணம், 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ நேற்று அறிவித்தது.