நன்றி குங்குமம் டாக்டர்
புற்றுநோய்களில் பலவகைகள் இருந்தாலும், பெண்களை பெருமளவில் பாதிக்கும் புற்றுநோய் என்றால் அது மார்பக புற்றுநோயாகும். முந்தைய காலங்களைவிட தற்போது பெண்களிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், கடந்த 7-8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டுமே ஆண்டுதோறும் சுமார் பதினைந்து ஆயிரம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
அதிலும், பெரும்பாலான பெண்கள் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர். எனவே, மார்பக புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது. தீர்வு என்ன.. சிகிச்சை முறைகள் என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மார்பகம் புற்றுநோய் நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணன்.
மார்பக புற்றுநோய் ஏற்பட என்ன காரணம்..
மார்பக புற்றுநோய் ஏற்பட இதுதான் காரணம் என்று சொல்வது கடினம். ஏனென்றால் பலவித காரணங்கள் பார்க்கப்படுகிறது. உதாரணமாக சொல்ல வேண்டும் பெரும்பாலான பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தினால் ஏற்படுகிறது. பொதுவாக ஒரு பெண் பருவம் அடைந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் காலம் வரை ஒவ்வொருவருக்கும் ஹார்மோன் ஆக்டிவாக இருக்கும். சில சமயங்களில் ஹார்மோனில் ஏதேனும் மாற்றமோ பிரச்னையோ ஏற்பட்டால் அது புற்றுநோயாக மாற வாய்ப்பு உண்டு. இது தவிர, 5- 10 சதவீதம் பரம்பரை காரணமாக ஏற்படும் மரபணு பிறழ்ச்சியினால் ஏற்படலாம்.
மேலும், முன்பை விட தற்போது மார்பக புற்றுநோய் அதிகரிக்க என்ன காரணம் என்றால் நமது வாழ்க்கைமுறை மாற்றமே காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக உணவு பழக்க வழக்கம் மாறியதுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக, தெருவுக்கு தெரு இருக்கும் பிரியாணி கடைகள், ஜங்க் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்கள் பெருக பெருக நோய்களும் பெருகிவிட்டது. அதிக எண்ணெய் பதார்த்தங்கள் உட்கொள்வது.
ஒருமுறை உபயோகப்படுத்திய எண்ணெயை பலமுறை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது போன்றவற்றினால் உடலில் அதிகப்படியான கொழுப்பு, அதிகப்படியான புரதம் என தேவைக்கு அதிகமாக சேரும்போதும் அவை உடலில் பல மாற்றங்களை உருவாக்குகிறது. இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் அனைத்தும் சரியான அளவில் போய்ச் சேராமல் அதிகப்படியாகவோ அல்லது குறைந்த அளவிலோ கிடைக்கும்போது அவை ஹார்மோனில் மாற்றங்களை உருவாக்குகின்றன. மேலும், அந்தகாலத்து பெண்களைப் போன்று இல்லாமல் தற்போது உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. இதுவும் புற்றுநோய் வர ஒரு காரணமாகிறது. இது புற்றுநோய் என்றில்லாமல் வேறு பல்வேறு நோய்கள் உருவாகவும் காரணமாகிறது.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இனி காலச்சூழல் இப்படிதான் இருக்கும். இதுபோன்ற வாழ்க்கையை நாம் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டோம். எனவே, இதிலிருந்து நாம் நம்மை தற்காத்துக் கொள்ளவில்லை என்றால், இன்னும் காலம் செல்ல செல்ல பல்வேறு நோய்களும் அதிகரிக்கத்தான் செய்யும். இந்தநிலை மாற வேண்டும் என்றால், அதற்கு உலகளவில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும். மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.
ஆரம்ப நிலையில் கண்டறியும் சுய பரிசோதனைகள்
சுய பரிசோதனை எனும்போது, மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது. மார்பகங்களை தொட்டோ அழுத்தியோ பார்த்து ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி பரிசோதனை செய்யும்போது வழக்கத்துக்கு மாறாக கட்டிகளோ, வீக்கமோ, வலியோ தென்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
அதேசமயம், நாம் அறிகுறிகளை தேடி சுய பரிசோதனை செய்தோம் என்றால் அவை எல்லாமே நமக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். எனவே, நாங்கள் சொல்லும் சுயபரிசோதனை என்றால், நார்மலாக எப்படி இருக்கும் என்று உங்களுக்கு முதலில் ஒரு விழிப்புணர்வு இருந்தால், சுயபரிசோதனை பலனளிக்கும். நார்மலில் இருந்து ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறலாம். அப்படி தெரியவில்லை என்றால் 40 வயதை தொட்டபிறகு ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
நவீன சிகிச்சை முறைகள்
தற்போது நிறையவே நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நோயைக் கண்டறியும் எக்ஸ்ரே, ஸ்கேன் முதல் கொண்டு வேவ்வேறுவிதமான பயோப்ஸி சோதனைகள், மருத்துவ சிகிச்சைகள் என பல வகையான நவீன கருவிகளும், மருத்துவ சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. உதாரணமாக டார்கெட்டட் தெரபி, ரேடியோ தெரபி, இம்மினோதெரபி போன்றவை வந்துவிட்டதால் பக்க விளைவுகள் கூட தற்போது குறைவாகவே இருக்கிறது.
தற்காத்துக்கொள்ளும் முறைகள்
இன்றைய காலசூழலில் நம் நாட்டினரின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. இதில் சில விஷயங்கள் நமது கட்டுக்குள் இருக்கிறது. சில விஷயங்கள் நம்மை மீறி நடக்கிறது. உதாரணமாக நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர் போன்றவற்றை கிடைப்பதைக் கொண்டுதான் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் உணவு பழக்கம் அப்படியில்லை. நாம் உண்ணும் உணவு நம் கையில் தான் இருக்கிறது.
எனவே, முடிந்தவரை ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் சரிவிகித உணவுமுறைக்கு மாற வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இன்றைய சூழலில் பெண்கள் பலரும் தினம் தினம் மல்டி டாஸ்க்கை சந்தித்து வருகிறார்கள். தூங்கி எழுந்ததில் இருந்து வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு என்று பல சவால்களை கடக்க வேண்டி இருக்கிறது. அதிலும் தினசரி அலுவலகம் சென்று திரும்புவதே ஒரு சவால்தான். இதற்கிடையில், பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவது என்பது கடினமானதுதான். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி பெண்கள் தங்களது ஆரோக்கியத்திற்காகவும் சிறிது நேரத்தை நிச்சயம் ஒதுக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 6-7 மணி நேரமாவது நன்றாக தூங்கி ஏழ வேண்டும். ஏனென்றால், ஆரோக்கியத்தை காக்கும் விஷயத்தில் தூக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி அரைமணி நேரமாவது உடற்பயிற்சிகளுக்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு தங்களின் ஆரோக்கியத்தில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வருங்காலம் வளமாக இருக்கும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்