நன்றி குங்குமம் தோழி
பெண்களை அதிகமாக பாதிக்கக்கூடிய நோய் என்றால் அது மார்பகப் புற்றுநோய்தான். இளம் வயதிலிருந்தே பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் மத்தியில் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும் அந்த நோய் குறித்தான பயம் என்பது அதிகமாகவே இருக்கிறது. மார்பகப் புற்றுநோய் குறித்து காவேரி மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் ஆலோசகரும் மருத்துவருமான கீர்த்தி குமரனிடம் பேசிய போது, ‘‘மார்பகப் புற்றுநோயால் அதிகமாக பெண்கள் பாதிக்கப்பட்டாலும் அதனை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் முழுவதுமாக குணப்படுத்திவிட முடியும். இதற்கான அறிகுறிகளை நாம் கண்டறிந்தால் உடனே அதற்கான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
மார்பகம் மற்றும் அக்குள்களில் கட்டிகள் வருதல், தோலில் சிவந்த புள்ளிகள் தென் படுதல் போன்றவை மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள். மார்பகத்திலோ அல்லது அதை சுற்றியோ கட்டிகள் வந்தால் அது புற்று நோய் என்று நினைக்க வேண்டாம். மார்பகத்தைச் சுற்றி வரும் கட்டிகள் பெரும்பாலும் புற்றுநோய் அல்லாத கட்டிகள்தான். எடுத்துக்காட்டாக பைப்ரோ அடினோமா கட்டிகள். புற்றுநோய்கள் மரபணு காரணமாகவும் ஏற்படலாம். அதனால் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் வந்தால் அதற்கடுத்து அவர்களுடைய குழந்தைகளுக்கும் சாத்தியங்கள் இருக்கலாம். பெண்கள் குறைந்த வயதில் பூப்பெய்துதல், மெனோபாஸ் தள்ளிப்போதல் போன்றவற்றாலும் மார்பகப் புற்றுநோய் வரலாம். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் மருத்துவரை அணுகுவது நல்லது.
மார்பகப் புற்று நோய்களை நான்கு நிலைகளில் பிரிக்கலாம். முதல் நிலையில் இருப்பவர்களை முழுமையாக குணப்படுத்திவிட முடியும். இரண்டாம் நிலையில் கட்டி வந்த இடத்தை மட்டும் அகற்றிவிடலாம். திரும்பவும் அவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களும் குறைவு. மூன்றாவது நிலையில் மார்பகங்கள் மற்றும் அக்குள்களில் புற்றுநோய் பரவியிருக்கலாம். நான்காம் நிலையில் புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கும் பரவிவிடும். முதல் நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் கட்டிகள் வந்த பகுதிகளை மட்டுமே அகற்றி விடுவோம். நான்காம் நிலையில் மார்பகங்களை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எல்லோருக்கும் மார்பகங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மார்பகங்களை சுற்றியுள்ள தசைகளையோ அல்லது அடிவயிற்றில் உள்ள தசைகளை எடுத்தோ மார்பகங்களில் வைத்து அறுவை சிகிச்சை செய்வதால், மார்பகம் அகற்றியது போல் இருக்காது. மேலும் அதற்கு ஏற்ப உடைகளை அணிந்து கொள்ளலாம். மார்பகப் புற்றுநோயை தவிர்ப்பதற்கும் வழிகள் இருக்கிறது. வயதாக எடை கூடுவதை தவிர்த்தல், 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்ளுதல், தாய்ப்பால் கொடுத்தல் போன்றவற்றாலும் மார்பகப் புற்றுநோய் வருவதை தவிர்க்கலாம். குறிப்பாக வருடம் ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்’’ என்கிறார் மருத்துவர் கீர்த்தி குமரன்.
மருத்துவர்: கீர்த்தி குமரன்