குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே மசூதி உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தில் மசூதி உள்ளது. இங்கு நேற்று தொழுகைக்காக வந்தவர்கள், பள்ளிவாசலுக்குள் வைத்திருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு, திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பள்ளிவாசலுக்குள் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், பள்ளிவாசல் கட்டிட நிதிக்காக இரண்டு உண்டியல்கள் பூட்டுபோட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்ம நபர்கள், அதனை உடைத்து அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும், உண்டியலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.1 லட்சம் வரை இருந்திருக்கலாம் என பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளிவாசலில் இருந்து உண்டியலை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.