*சுற்றுலா துறை அமைச்சர் பெருமிதம்
ஊட்டி : காலை உணவுத்திட்டம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 290 பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 12 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட மதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 16ம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக, 63 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு குன்னூர், கோத்தகிரி, ஊட்டி மற்றும் கூடலூர் வட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட 187 ஊராட்சி மற்றும் 80 பேரூராட்சி என மொத்தம் 267 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளிலும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் என 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டமானது விரிவாக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில், இத்திட்ட துவக்க விழா குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது. விழாவில் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து குழந்தைகளுக்கு உணவு வழங்கி, குழந்தைகளுடன் உணவு உட்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் போக்குவரத்து துறை அரசு சிறப்பு செயலாளா் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அமைச்சர் ராமசந்திரன் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.
குழந்தைகள் பசியின்றி கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் முதலமைச்சாின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அதே ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கூடலூர் வட்டம் ஊரக பகுதிகளில் 27 பள்ளிகளிலும், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சியில் 19 பள்ளிகளிலும், ஓவேலி மற்றும் தேவர்சோலை பகுதிகளில் 17 பள்ளிகளிலும் என மொத்தம் 63 அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் 3,191 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டம் மிகவும் பயனுள்ள திட்டம் என்பதால், தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சாின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை பகுதியில் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுடன் உணவு சாப்பிட்டார்.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை விரிவுப்படுத்திட தெரிவித்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள 139 பள்ளிகளிலும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 64 பள்ளிகளிலும், நகராட்சி பகுதிகளில் உள்ள 24 பள்ளிகளிலும் என மொத்தம் 227 பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 8 ஆயிரத்து 811 மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் மூலம் உணவு வழங்கப்படுகிறது.
நமது மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதற்கட்டம் மற்றும் 2ம் கட்டம் என மொத்தம் 290 பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரத்து 2 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
கிராமப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டம் சிறந்த முறையில் செயல்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில்,‘‘இத்திட்டமானது நீலகிரி மாவட்டத்தில் கடைக்கோடி பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் அமையும். எனவே, இத்திட்டத்தினை சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.
இதனையடுத்து, காலை உணவுத்திட்ட விரிவாக்கம் குறித்த குறும்படம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நடனத்தை அமைச்சர் பார்வையிட்டார்.இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலகணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கீதா, குன்னூர் வருவாய் கோட்டாட்சியா் பூஷணகுமார், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) மணிகண்டன் உட்பட அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என கலந்து கொண்டனர்.