வேப்பூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டலபட்டி அருகிலுள்ள கே.என்.கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் குப்பன் மகன் முனியப்பன்(56). இவர் கிருஷ்ணகிரியில் இருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு லாரியில் இரும்பு வேலி பென்சிங் அமைக்கும் கருங்கல் ஏற்றி சென்றார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஏ.சித்தூர் அருகே சென்ற போது லாரி பழுதாகி நின்றுவிட்டது. இதையடுத்து, பழுது நீக்க மெக்கானிக்கிற்கு தகவல் கொடுத்துவிட்டு லாரியிலேயே அமர்ந்திருந்தார்.
அப்போது பெரம்பலூரிலிருந்து எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த லாரி, ஏ.சித்தூர் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நின்றுகொண்டிருந்த லாரி கவிழ்ந்ததில், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த முனியப்பன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய லாரியும் கவிழ்ந்தது.
இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் மூலம் கருங்கல்லை அப்புறப்படுத்தி, முனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.