தேவையான பொருட்கள்:
பால் பிரட் – 4 துண்டுகள்
மைதா – 1 டேபிள் ஸ்பூன்
பால் – 1/4 கப்
ரோஸ் எசன்ஸ் – 2 துளிகள்
பொடித்த சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு
தேவையான அளவு சர்க்கரை பாகுவிற்கு…
சர்க்கரை – 1/4 கப்
தண்ணீர் – 1/4 கப்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து, சர்க்கரை கரையும் வரை சூடேற்ற வேண்டும். நீரில் உள்ள சர்க்கரை முழுவதும் கரைந்து, சர்க்கரைப் பாகு ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்து விட வேண்டும். சர்க்கரை பாகு குளிர்ந்து வெது வெதுப்பானதும், அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிரட் துண்டுகளை எடுத்து அதன் பக்கவாட்டில் உள்ள ப்ரௌன் நிற பகுதியை நீக்கி விட வேண்டும். பின் ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் எடுத்து பாலில் நனைத்து பிழிந்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அரைத்த பிரட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சோடா உப்பு, மைதா சேர்த்து கைகளில் ஒட்டாத அளவில் நன்கு மென்மையாக பிசைந்து, பின் அதனை சிறு உருண்டைகளாக மென்மையாக உருட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். அனைத்து உருண்டைகளையும் பொரித்ததும், அவற்றை சர்க்கரை பாகுவில் சேர்த்து, 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இறுதியில் அந்த உருண்டைகளை எடுத்து, பொடித்த சர்க்கரையில் உருட்டினால், பிரட் ட்ரை குலாப் ஜாமூன் ரெடி!