திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே சாலையில் தெருநாய்கள் குறுக்கே வந்ததால், அவற்றின் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டதால் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி குழந்தைகள் 5 பேர் காயம் அடைந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்த நிலையில் 5 குழந்தைகள் தங்களது வீடுகளுக்கு செல்ல ஒரு ஆட்டோவில் கிளம்பினர்.
ஆட்டோ திருக்கழுக்குன்றம் மின் நிலையம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே தெருநாய்கள் கூட்டமாக ஓடி வந்ததைப் பார்த்த ஆட்டோ டிரைவர் சட்டென்று பிரேக் போட்டதில் நடுரோட்டிலேயே ஆட்டோ தலைக்குப் புற கவிழ்ந்தது. உடனே அங்கிருந்தவர்கள் ஓடி வந்து கவிழ்ந்த ஆட்டோவில் சிக்கியிருந்த பள்ளி குழந்தைகளை மீட்டனர். இந்த விபத்தில் 5 குழந்தைகளுக்கும் காயம் ஏற்பட்டது. தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, காயமடைந்த குழந்தைகளை சிகிச்சைக்காக திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.