ஸ்ரீபெரும்புதூர்: திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே முதுகூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (58). நசரத்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 9ம்தேதி மனைவி புவனேஸ்வரி (56) என்பவருடன், பூந்தமல்லியில் இருந்து பூஜை பொருட்கள் வாங்கிகொண்டு மண்ணுார் சாலை வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சின்னவளர்புரம் அருகே சென்றபோது, பைக்கின் பின் டயர் திடீர் என பஞ்சர் ஏற்பட்டது. இதில், நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். விபத்தில் மயக்கமடைந்த எஸ்ஐ பழனியை மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் தனியார் மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளது. பழனியின் உடல் உறுப்புகள் தானம் தர அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் போதிய குளிர்சாதன வசதி இல்லை. இதனால், உடல் உறுப்பு தானம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிரிழந்த பழனியின் உடல் தனியார் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.