Friday, June 13, 2025

மூளையின் முடிச்சுகள்

by Lavanya

 

நன்றி குங்குமம் தோழி

இளைஞர்களும், விதிமீறல்களும்!

‘இளம் கன்று பயமறியாது’, ‘மனித மனம் குரங்கு’ போன்ற பழமொழிகளை வளரிளம் பருவ வயதினருக்கு சொல்லும் அளவுக்கு முக்கியமான காலகட்டமாக இளைஞர்களின் வயது இருப்பதை மறுக்க முடியாது. தன்னைப் பற்றி புரிந்துகொள்ள முடியாத ஒரு பருவமென்றால் அது வளரிளம் பருவம் மட்டுமே.இளம் வயதினரிடம் இருக்கும் குதர்க்கமும், எல்லையற்ற கற்பனைகளும், எதுவானாலும் பார்த்துக்கலாம் என்கிற வீராப்பும், சமூக கட்டமைப்புக்குள் இருக்கின்ற அத்தனை விஷயங்களையும் கேள்விக்குள்ளாக்கும் நபர்களாக எப்போதும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாய் பரவியது. இருபது வயதுக்குள் இருக்கின்ற ஒரு இளைஞன், தன் வயிற்றுப் பகுதியை காண்பித்து, ‘தன் காதலி ஐ போன் விரும்பினாள் என்றும், அதற்காக தனது கிட்னியை விற்று, அதில் கிடைத்த பணத்தில் ஐபோன் வாங்கினேன்’ எனவும் ஜாலியாய் சிரித்தபடி ஒரு வீடியோவை பதிவேற்றி இருந்தான். ஏதோ ஒரு நாட்டின் ராஜ்யத்தையே பிடித்த மாதிரி அவனுடைய முகத்தில் குதூகலத்தையும், கொண்டாட்டத்தையும் பார்க்க முடிந்தது.

Teenage Brain is Always Tricky Brain என்பார்கள். இளைஞர்களின் உடலும், மனமும் தராசின் எடை போல் ஒருசேர இல்லாமல், மாறி மாறி ஏறி இறங்கிக் கொண்டேயிருக்கும் பருவம். அதனால்தான் மைனராக இருக்கும் பட்சத்தில் குற்றம் புரிகிற இளைஞனுக்கு, சட்டம் தண்டனையை குறைத்து, அவனை திருத்தி நல்வழிப்படுத்தும் முயற்சிகளை கையில் எடுக்கிறது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் (POCSO Act) இளைஞர்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதை சமீபத்தில் வெளியான ‘COURT’ திரைப்படம் வெளிப்படுத்தியது. போக்சோ சட்டத்தைப் பயன்படுத்தி, மைனராக இருக்கும் ஒரு பெண்ணின் காதலை குடும்பத்தினர் எப்படி மடைமாற்றுகின்றனர் என்பதையும், வளரிளம் பருவத்து ஆண், பெண் ஈர்ப்பில் உடலும், மனமும் கற்பனைகளையும், கனவுகளையும் வெளிப்படுத்தும், குறும்புத்தனமான செயல்களில் கட்டுண்டு, என்ன மாதிரியான விளைவுகளை தங்களுக்கு அவை ஏற்படுத்தும் என்பதை அறியாதவர்களாய், சட்டம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படாத தலைமுறையினராக குடும்பமும், சமூகமும், சட்டமும் எப்படி அந்த நிகழ்வைப் புரிந்து கொள்கிறது, இளைஞர்களை வழிநடத்துகிறது என்பதை தெளிவாக திரைக்கதையில் வெளிப்படுத்தி இருந்தார்கள். இம்மாதிரியான படைப்புகள் வழியாகவே, இளம் தலைமுறையினரின் செயல்களை பெற்றோருக்கும், சமூகத்திற்கும் புரிய வைக்க முடியும்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிற இன்றைய இளைஞர்கள், தங்களின் ரீல்ஸ்களை வைரலாக்கும் எண்ணத்தில், இனி சினிமாவில் கதாநாயகர்களே தேவையில்லை என்கிற அளவுக்கு சாகசங்களில் ஈடுபடுவதை பல்வேறு தளங்களில் பார்க்க முடிகிறது. இன்றைய இளைஞர்கள் இயற்கையுடனும், இயந்திரத்துடனும் மல்லுக்கட்டுவதாகட்டும், முக்கியமாய் ஆண்-பெண் உறவில் நட்பை வெளிப்படுத்துவதாகட்டும், காதலை சொல்வதிலும், காமத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்வதிலுமாகட்டும், அனைத்து தளங்களிலும் அதகளப்படுத்திக் கொண்டே அவர்களின் உலகை இன்னும் கூடுதலாய் விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறார்கள். இளம் தலைமுறையின் இந்த அதிரடி மாற்றத்தை பெரியவர்கள் உள்வாங்கிக் கொள்வது கடினமான ஒன்றாகவே இருக்கிறது.

இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், அவர்கள் செய்கிற அனைத்து செயல்களும் சமூகத்தில் உடனே பிரதிபலிக்கிறது. ஐபோனுக்காக கிட்னியை விற்ற பையனையும், தன்னுடைய பிறந்தநாளை வீட்டில் கொண்டாடவில்லை என்பதற்காக தற்கொலை செய்ய முயற்சித்த பெண்ணையும் புரிந்துகொள்ள முடியாமல் இன்றைய பெற்றோர் தவிக்கின்றனர். இளைஞர்களையும், கற்பனைகளால் நிறைந்த அவர்களின் உலகையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் அவர்களை கவனிக்கத் தொடங்க வேண்டும்.

இவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு குடும்பத்துக்கும், அரசுக்கும், சமூகத்துக்கும் இருக்கிறது என்றாலும், இந்த இளைஞர்களின் வழியாகத்தான் கல்வியையும், சமூகக்
கட்டமைப்பையும் நாம் திணித்துக் கொண்டிருக்கிறோம். விதிகளை மீறுகிற இளைஞர்களின் வழியாகத்தான், ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்திருக்கிறது. இளைஞர்கள் செய்கிற தவறுகளை ஒப்பீடு செய்து பார்க்காமல், தலைமுறை இடைவெளியை கருத்தில் கொண்டு, ஒப்பீடு செய்தல் மிகவும் பிற்போக்குத்தனமான விஷயம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, கல்வியில் ஈடுபாடு காட்டாமல், படிக்க வேண்டிய வயதில் கல்வி கற்காமல், காதல், காமம் என இளைஞர்கள் சுற்றுகிறார்கள் என குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவர்கள் மீது சுமத்தாமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற ரீதியில் சிந்தித்தால் மட்டுமே, இளைஞர்களை மேம்படுத்த முடியும். இங்கே சமுதாயத்தின் முன் பொறுப்பற்ற நபராகவும், சட்டத்தின் முன் குற்றவாளியாகவும் ஒரு வட்டத்திற்குள், வாழ்நாள் முழுவதும் இளைஞர்கள் அடைக்கப்படுகிறார்கள்.

நான் கெட்டவன், மோசமானவன், சைக்கோதனமானவன் போன்ற வார்த்தைகளை திரைப்படங்கள் வழியாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும், ஃபேன்டசிக்காக இளைஞர்கள் சொல்வதைக் கேட்கும்போது, குறிப்பிட்ட வார்த்தையின் வீரியம் தெரியாமல் பேசுகிறார்கள் என்பதோடு, அவர்கள் பயன்படுத்துகிற வார்த்தைகள், அவர்களை எல்லை மீறி நடக்க வைக்கத் தூண்டுகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம். நல்லவர்களாக இருப்பதையே மனிதர்கள் என்றைக்கும் விரும்புவார்கள்.

அதனால்தான் சினிமா கதாநாயகர்களின் மீது பெரிய பிரமிப்பு இன்றைக்கும் இருக்கிறது.இளம் தலைமுறையினர் மீது கட்டமைக்கப்படும் இத்தகைய தவறான எண்ணங்களால், நல்லவிதமாய் வாழ நினைக்கும் இளைஞர்களும், இக்கட்டான சூழலில் இருந்து எப்படி மீள வேண்டுமென்கிற வழிகாட்டுதல் கிடைக்காமலே வாழ்நாளைத் தொலைக்கிறார்கள். தன் மீதான நல்ல அபிப்பிராயமும், மரியாதையும் மட்டுமே மனிதனை மனிதநேயத்துடன் இருக்க வைக்கிறது. வளரிளம் பருவ வயதில் இருக்கும் இளைஞர்களின் மூளைக்குள் இருக்கும் எண்ணங்களை எடை போடாமல், அவர்களின் சிந்தனைகளை நேர்வழிப்படுத்துவதே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை.

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi