நன்றி குங்குமம் தோழி
தனிமைத் தளிர்
“ஒத்த மரம் தோப்பாகாது” என்பது, பெரும்பாலும் தனியாக இருப்பவர்களைப் பார்த்து சொல்கிற சொலவடையாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது. ஆனால் கல்வியில் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் சுயமாக முடிவெடுக்கும் தன்மையினால் பெண்கள் தங்கள் வாழ்க்கையை, தங்களின் விருப்பப்படி, தனியாகவே இருக்கும் வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்து சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
திருமண அமைப்பிற்குள் இருக்கும் பெண்களுக்கும், தனியாக வாழ முடிவெடுத்திருக்கும் பெண்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. தனியாக வாழுகிற வாழ்வைத் தேர்ந்தெடுத்து வாழும் பெண்ணிற்கு, அளவு கடந்த சுதந்திரம் இருக்கிறது. அதைப் பார்க்கின்ற, நெருக்கடியான திருமண அமைப்பிற்குள் வாழுகின்ற பெண், தனக்குப் பிடித்த விஷயங்களை செய்ய முடியாத நிலையில், இருவருக்குள்ளும் ஏற்ற இறக்கங்கள் நிறையவே இருக்கிறது.
ஆனால், நெருக்கடியான திருமணத்திற்குள் சிக்கிய பெண்களும் கல்வியில் சிறந்தவர்களாக, நல்ல பதவிகளில்… குறிப்பாக இலக்கியம், அறிவியல், பொருளாதாரம், தகவல் தொழிநுட்பம், அரசியல் என பல்வேறு துறைகளில், பல்வேறு தளங்களில் நின்று, சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். பொருளாதாரத்திலும் இவர்கள் மேம்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் தங்களின் அடிப்படைத் தேவையான சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாதவர்களாய், தீவிரமான மனக்குமுறல்களோடு, வெளியில் சொல்ல முடியாத நிலையில், வாழ்க்கை இவர்களுக்கு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தி இருக்கும்.
உதாரணத்திற்கு, மனிதன் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானதாய் இருப்பது தூக்கம். அதேபோல் உணவு மற்றும் உடை. இவை மூன்றுமே மனிதனை திருப்திப்படுத்தக்கூடியதாகவே எப்போதும் இருக்கும். உடல் ஓய்வைத் தேடும்போதெல்லாம், தூங்கி எழவில்லை என்றால், அடுத்தடுத்த பிரச்னைகளில் நம்மைக் கொண்டுவந்து நிறுத்தும். பிடித்த நேரத்தில் தூங்கவும், ஓய்வெடுக்கவும், பிடித்த உணவை உண்ணவும் முடியவில்லை என்றால், பெண்களின் மனதிற்குள் இது மிகப்பெரிய ஆற்றாமையை ஏற்படுத்தும்.
ஆனால் தனித்து வாழும் பெண்களால், அவரின் ஓய்வு நேரத்தை அவர்களுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடிகிறது. அதேபோல், நேரம், நாள், கிழமை, நெருக்கடிகள் ஏதும் இல்லாதவர்களாக, அவர்களின் தேவைக்கேற்றவாறு ஓய்வெடுக்கவும், உடை உடுத்தவும், உணவை எடுக்கவும் சுதந்திரம் இருக்கிறது. மிக முக்கியமான ஒன்றாய், தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தனித்து வாழும் பெண்ணிற்கு எந்த வயதிலும் நிகழலாம். இந்தக் காதல் எனக்கு வேண்டும், வேண்டாம் என தாங்களாகவே முடிவெடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் திருமண வாழ்க்கைக்குள் இருக்கிற பெண்களுக்கு, மனதிற்குப் பிடித்தவற்றைச் செய்வதற்கும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அதிகமான கட்டுப்பாடுகள் இருக்கிறது.
குடும்பங்களுக்குள் நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க, பெண்ணின் மனச்சோர்வு அதிகமாகி, பெண்கள் திருமண வாழ்க்கையை வெறுப்புணர்வுடன் எதிர்கொள்ளவும் பார்க்கவும் ஆரம்பிக்கிறாள். விளைவு, தனித்து வாழும் பெண்களின் சுதந்திர உணர்வு, திருமணம் செய்த பெண்களின் மனதுக்குள், அவர்களைக் கேள்விகளால் குடைய ஆரம்பிக்கின்றது. இங்கே முக்கியமான ஒன்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, மனிதனின் மரபணு என்றைக்குமே அடிப்படைத் தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும்.
நமது சமூகத்தில் வகுக்கப்பட்டுள்ள கலாச்சாரத்தின் படி, திருமணம் என்கிற அமைப்புக்குள் நுழைகிற பெண்கள், தங்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட தியாகம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அது இயல்பானதாகவும் மாற்றி கட்டமைக்கப்படுகிறது. மிகமிக அடிப்படைத் தேவைகளான ஓய்வு, உணவு, காதல் மூன்றையும் தியாகம் செய்ய வேண்டிய நெருக்கடியான சூழலுக்குள் பெண்கள் அதிகம் சிக்கி சிதைகிறார்கள். இதன் காரணமாகவே தனித்து வாழும் பெண்களின் சுதந்திரமான செயல்பாடுகளைப் பார்த்து, திருமண வாழ்க்கைக்குள் இருக்கும் பெண்கள் ஏக்கப் பெருமூச்சு விடும் நிலை ஏற்படுகிறது. தனித்து செயல்படும் பெண்ணின் சுதந்திரமான செயல்பாடுகளை ஏக்கத்தோடும்,
சிலநேரம் எதிர்மறை எண்ணங்களோடும் பார்க்கிறார்கள். அப்படியே அணுகுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இரு வேறு நிலைகளில் இருக்கிற இந்தப் பெண்களுக்குள் சிலநேரம் நட்பு உருவாகும் போது, தங்களின் குடும்ப அமைப்பை பற்றியும், குடும்பத்திற்குள் உள்ள முரண்கள், அடக்குமுறைகள், மூடநம்பிக்கைகள் என அனைத்தையும் பேசிப் பகிர்ந்து கொள்கிற சூழலும் உருவாகுகிறது. இதில் திருமணம் ஆன பெண்ணிற்குள், தனித்து வாழும் பெண்ணின் கட்டுப்பாடற்ற சுதந்திரமும், தன்னால் தன் எல்லையை மீற முடியாத ஆதங்கமும், கட்டுப்பாட்டை உடைத்து வெளியில் வரமுடியாத நெருக்கடிகள் போன்றவற்றால், தனித்து வாழும் பெண் மீது, சில நேரத்தில் அது பொறாமை உணர்வாக மாறும் அபாயம் சில நேரங்களில் நிகழ்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படும் தனிமை வாழ்வைத் தேர்ந்தெடுத்த பெண்கள், தேவையற்ற பிரச்னைகளை சந்திக்கும் சூழலுக்கும் உள்ளாகிறார்கள்.
ஒற்றை மரம் தோப்பாய் மாறாது என்பது உண்மைதான் என்றாலும், அது தன்னுடைய வேரில் இருந்தே வளர்ந்து, எந்த உயரத்தையும் தொடமுடியும் என்பதும் இங்கு நிதர்சனம்தானே? இதன் வழியாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். திருமண பந்தத்திற்குள் நுழையும் பெண்களின் சின்னச் சின்ன உணர்வுகளையும் குடும்பங்கள் அலட்சியப்படுத்த வேண்டாம் என்பதையே, நவீன சமூகம் நமக்கு உரக்கச் சொல்லி தலையில் கொட்டு வைக்கிறது.
மனநல ஆலோசகர்: காயத்ரி மஹதி,