Saturday, July 19, 2025
Home மருத்துவம்ஆலோசனை மூளையின் முடிச்சுகள்- அழகு அனைத்து வயதிற்குமானது!

மூளையின் முடிச்சுகள்- அழகு அனைத்து வயதிற்குமானது!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

அழகு அனைத்து வயதிற்குமானது!

Thug Life திரைப்பட விழா நிகழ்வில், நடிகர் கமலஹாசனின் துடிப்பு, ஆர்வம், அவரின் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் குறித்தெல்லாம், இந்த வயதிலும் கமல் தன் இளமையை மனதளவில் தக்க வைக்கிறார் எனப் புகழ்ந்து, ரசிகர்கள் பலரும் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். உலக நாயகன் கமலஹாசன், தன்னை தன் துறை சார்ந்த நிபுணராய் எந்த அளவு ஈடுபாட்டுடன் காண்பிக்கிறார் என்பதை ஒட்டுமொத்த சமூகமும் ரசித்து, திரையுலகிற்கு அவரின் பங்களிப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். எனக்குத் தெரிந்த, 60களில் இருக்கும் ஒருவர், ஃபேஷன் ஷோ ஒன்றிற்கு தலைமை தாங்கச் சென்றவர், தன்னை ஒரு மாடலிங் நிபுணராய், தனது பிசினஸ் வட்டாரத்திலும், சமூகப் பார்வையிலும் காண்பிக்க முயல்கிறார். எதற்காக இங்கு இதைச் சொல்கிறேன் என்றால், அழகு என்பதே இளமைக்கானது என்று நாம் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை சொல்வதற்காகவே சொல்கிறேன்.

சமூகம் இங்கு மனிதன் மீது கட்டமைத்து வைத்திருக்கும், குறிப்பிட்ட வயதுக்கு மேல் அழகு சார்ந்து பேசுவது அபத்தமானது எனவும், அதுவே சினிமா மற்றும் ஃபேஷன் உலகம் எனில், அது அவரின் தன்னம்பிக்கை, முயற்சி, திறமை என்றெல்லாம் பெருமையாக பேசவும் முடிவது முரணாகவே இருக்கிறது. 60 வயதில் இருக்கும் அம்மா ஒருவர், தனக்கு மிகவும் மன அழுத்தமாக இருக்கிறது என்றும், நான் அவலட்சணமான ஒரு தோற்றத்தில் தற்போது இருக்கிறேன் என்றும் வீட்டில் அழுதிருக்கிறார். அவரின் கைகளில் பணமிருந்தாலும், வீட்டில் இருப்பவர்கள் செலவு செய்ய விடாமல் தடுப்பதால், அவரால் அழகு நிலையத்திற்குகூட செல்ல முடியவில்லை என வருத்தப்பட்டார். காரணத்தை விசாரிக்கும் போதுதான் புரிந்தது, அவரின் கணவர் இவர் மீது ரசனைக்குரிய ஒருவராய் இருந்திருக்கிறார்.

மனைவி உடுத்துகிற புடவையில் தொடங்கி, மாடலாக அவருக்கு பிளவுஸ் தைப்பது, பியூட்டி பார்லர் சென்று அவரை நேர்த்தியாக்குவது என, கணவரின் உறுதுணை அவர் இருக்கும் வரை இந்த மனைவிக்கு கிடைத்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன் அவரது கணவர் இறந்துவிடவே, மனைவி வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ரொம்பவே சோர்வாகி, மன அழுத்தத்தில் இருந்தவர் தன் மீது கொஞ்சமும் கவனம் செலுத்தாமலே இருந்திருக்கிறார். தற்போது அதிலிருந்து மீண்டு, தன் மீது கவனம் செலுத்தவும், நேர்த்தியாக தன்னை வெளிப்படுத்தவும் ஆசைப்படுகிறார். அவருக்கென சேமிப்புகள் இருக்கின்ற ஒரு நல்ல வசதியான குடும்ப வாழ்க்கைதான் அவருடையது. ஆனால், வீட்டிலிருப்பவர்கள் இந்த வயதிற்கு மேல் பார்லர் செல்வதெல்லாம் வீண் செலவென, அவரின் விருப்பத்தை மதிக்காமல் தடுக்கிறார்கள்.

இதன் மற்றொரு வடிவமாய் வேறொரு சம்பவமும் இருக்கிறது. மாமியாருக்கு அதிகமாக முடி வளர்ச்சி இருக்கிறது. வயதாக வயதாக பராமரிக்க முடியாமல் அவர் கஷ்டப்பட்டிருக்கிறார். இதனால், தன் கூந்தலை சிறியதாக்கி, ஆண்களைப் போல பாப் கட் செய்ய முடியுமா என மருமகளிடம் கேட்டதும், மருமகள் உடனே அழகுக்கலை நிபுணரை வீட்டிற்கே வரவழைத்து, தன் மாமியாரின் சிகையின் நீளத்தைக் குறைத்து பாப்கட் செய்ய, மாமியார் பார்ப்பதற்கு முன்னாள் நடிகை சௌகார் ஜானகி மாதிரியான தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். தொடர்ச்சியாக தனது மாமியாருக்கு கொஞ்சம் முடி வளர்ந்தாலும், உடனே பார்லரில் இருந்து ஆளை வரவழைத்து முடியை ட்ரிம் செய்து கொள்ளச் சொல்கிறார் மருமகள். மாமியாரும், மருமகளும் நல்ல கூட்டணி என்று வீட்டில் உள்ளவர்களும், அக்கம் பக்கத்தினரும் கிண்டல் செய்வதை இவர்கள் இருவரும் ஒரு பொருட்டாக கண்டுகொள்ளாமல் ரொம்பவே ஜாலியாக இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட இரண்டு பெண்களுமே அறுபது வயதுகளில் இருப்பவர்கள்தான்.

ஆனால், ஒரு பெண்ணிற்கு வசதிகள் அனைத்தும் இருந்தும், தான் ஆசைப்பட்ட ஒன்றை, தனக்காக செய்துகொள்ள அவரால் முடியவில்லை. மற்றொரு பெண்ணோ, மருமகளின் துணையோடு பிடித்ததை தொடர்ச்சியாக செய்து கொள்கிறார். வயதானவர்கள் நமது வீடுகளில் இருக்கிறார்கள் என்றால், தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே அவர்களுக்கு உடை எடுப்பது, நோய்க்கான சிகிச்சைகளுக்கு செலவு செய்வது என இவைகள் மட்டுமே கடமையாகப் பார்க்கப்படுகிறது. இன்றைய நவீன உலகம் அனைத்து வயதினருக்குமானது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த இரண்டு உதாரணங்களைக் கூறி இருக்கிறேன்.இளம் வயதினர் வாழ்க்கையை கொண்டாட்டமாக அனுபவிக்கும் போது, வயதானவர்கள் மட்டும் புத்தரைப் போல் அமைதியாய் வேடிக்கை பார்க்கட்டும் என நாம் கடந்து போகக் கூடாது. அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய சமூகத்தில் வாழுகிறவர்கள், அடுத்தடுத்தகட்ட நகர்வுகளில், ஒவ்வொரு வயதிலும் விதவிதமாய் வாழவே ஆசைப்படுவார்கள்.

இங்கு வயதானவர்கள் என்பதைவிட, ஆர்வமும், முயற்சியும் இருக்கும் ஒவ்வொருவரும், தங்களை பிறர் முன் அழகாக, நேர்த்தியாக காண்பிக்கவே ஆசைப்படுவார்கள். அது இயலாத போது, அவர்களின் ஆசையும், ஏக்கமும் முற்றிலும் அவர்களை வெறுமைக்குள் தள்ளுகிறது என்பதையும் இங்கு உணர வேண்டும். இதெல்லாம் ஒரு பிரச்னையா என்ற கேள்விகளோடு, நாம் நகர்ந்துவிட முடியாது. மனிதன் வாழும் வரை அவனது ஆசைகள் விதம் விதமாக அதிகரிக்கும் என்பதே உண்மை. வயதானவர்கள் என்றாலே ஆசைகள் ஒழிந்து, வாழ்க்கை மீது பற்று இல்லாமல் வாழ்வார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர வளர ஒவ்வொரு மனிதனும் ஆசைகளை நோக்கி தள்ளப்படுகிறான் என்பதே இங்கு நிதர்சனம்.

தன்னை அழகாகவும், பெர்சனாலிட்டியாகவும் வெளிப்படுத்த, வயது வித்தியாசமின்றி, பாலின பேதமின்றி, உடை எடுப்பதில் தொடங்கி, தலை முடிக்கு கலரிங் செய்வது, உடல் பொலிவான தோற்றத்தில் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என அனைத்துமே இங்கு இயல்பானதாக மாறி வருகிறது. நமது மூளை ஒவ்வொரு மாற்றத்திற்கும் தயாராவது என்பது, பாம்பு தனது தோலை உரிப்பது போலத்தான். ஒவ்வொரு மனிதனும் புதிய பழக்கத்திற்குள் நுழைவதற்கு பல தடைகளை மூளைக்குள் நிகழ்த்தி விட்டுதான், வெளியே வார்த்தைகளில் பேச ஆரம்பிக்கிறார்கள்.எனவே, ஒவ்வொரு வீடுகளிலும் இதுமாதிரியான விருப்பங்களோடு இருக்கும் பெரியவர்களின் உணர்வுகளையும் கவனித்து, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியினை கொஞ்சமாகச் செய்தாலும் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நம் வீடுகளில் நம்மோடு எப்போதும் இருக்கும், நம் வீட்டுப் பெரியவர்களின் உணர்வுகளையும், விருப்பத்தையும் கொண்டாடப் பழகுவோம்.

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi