Saturday, June 15, 2024
Home » பார்வையற்றோருக்காக பிரெய்லி முறையில் கியூப் – அசத்தும் பெண்கள்!

பார்வையற்றோருக்காக பிரெய்லி முறையில் கியூப் – அசத்தும் பெண்கள்!

by Porselvi

“எங்கள் குழந்தைகள் மொபைல் போனையே பாத்துக் கொண்டு இருக்கிறார்களே” என புலம்புபவர்கள் அவர்களை எங்களிடம் அனுப்பலாம் என்கிறார்கள் தமிழ்நாடு கியூப் அசோசியேஷன் மூலம் கியூப் பயிற்சி வகுப்புக்களை நடத்தி வரும் சகோதரிகள் சந்திரிகா மற்றும் பிந்து ப்ரியங்கா. இவர்களது சகோதரர் ஆனந்த் ராஜேந்திரன் அவர்களும் இவர்களோடு இணைந்து இதனை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார். கியூப் கற்றுக் கொள்வதால் மூளையின் செயல்திறன் அதிகமாகிறது என்கிறார்கள் இவர்கள். குழந்தைகளுக்கு கியூப் சொல்லித்தரும் இவர்கள் இத்துறையின் இருபது வருட அனுபவசாலிகள். குழந்தைகள் ஏன் கியூப் கற்க வேண்டும் என்றும் அதனால் ஏற்படுகின்ற நற்பலன்கள் என்னென்ன என்பதை குறித்தும் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து..

கியூப் குறித்து சொல்லுங்கள்?

மனதை ஒருமுகப்படுத்தவும், கவனத்தை சிதற விடாமல் இருக்கவும், மூளைபயிற்சிக்கும், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் இந்த கியூப் மிகவும் உதவிகரமாக இருக்கும். கியூப் கற்றுக் கொள்வது என்பது நாம் செய்யும் அனைத்து செயல்பாடுகளுக்குமே நன்மையை தரும். உலகத்தில் கியூப்ல் மொத்தம் 3000 வகைகள் உள்ளது. இந்தியாவில் மட்டும் 350 வகை கியூப் உள்ளது. எங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வகையான கியூப்களை செய்யும் வகையில் பயிற்சி அளித்து வருகிறோம். கியூப் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் படிப்பு, விளையாட்டு என அனைத்திலும் சிறப்பாக செயல்படுவதை கண்கூடாக காணமுடிகிறது. இதன் மூலம் கணக்குப் பாடத்தை கூட எளிமையாகக் கற்றுத்தர முடியும்.

கியூப் கற்றுக்கொள்வதால் என்னென்ன நன்மைகள்…

நான் ஒன்பது வயதிலிருந்தே கியூப் விளையாடி வருகிறேன். எங்களுக்கு கியூப் விளையாட்டில் இருபது வருடத்திற்கு மேற்பட்ட அனுபவங்கள் உண்டு. இது குறித்த பயிற்சி வகுப்புகளை கடந்த 12 வருடங்களாக நடத்தி வருகிறோம். இதுவரை எங்களிடம் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கியூப் கற்றுக்கொண்டு பயனடைந்துள்ளனர். இதில் பலர் ஆசிய அளவில், இந்திய அளவில் என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். பலர் தனிநபர் பிரிவிலும் குரூப் பிரிவிலும் கின்னஸ் சாதனைகளை செய்துள்ளனர் என்பதும் மிக மகிழ்ச்சியான விஷயம். கியூப் யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். கியூப் கற்றுக்கொள்வதால் மன அழுத்தம் பெருமளவு குறைந்து மனம் சமநிலையை அடைகிறது. இங்கு கியூப் மட்டுமல்ல மூளைக்கு வேலை தரும் செஸ் போன்றவற்றையும் கற்றுத் தருகிறோம். உலாஉப், க்ளாஸ் பெயிண்டிங், ஆரிகேமி, ஹேண்ட் ரைட்டிங் போன்றவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

உங்களிடம் கியூப் கற்றுக் கொள்பவர்கள் குறித்து சொல்லுங்கள்?

எங்களிடம் மூன்று வயது குழந்தைகள் முதல் தொண்ணூறு வயது பாட்டி வரை அனைத்து வயதினரும் ஆர்வமுடன் கியூப் கற்றுக்கொள்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களும் கூட ஆர்வமுடன் கற்றுக் கொள்கிறார்கள். தற்போது இருநூறு பேருக்கு மேல் நேரிடையாக வகுப்புகளுக்கு வந்து கற்றுக்கொள்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள பல பகுதிகளிலிருந்து ஆன்லைன் மூலம் பலரும் கற்று பயனடைகிறார்கள். எங்களது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மூலம் சைனா, ஜப்பான், கனடா, அமெரிக்கா, UAE, துபாய், சிங்கப்பூர், லண்டன் என பல்வேறு இடங்களில் உள்ளவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறோம். அதில் இந்தியர்கள் மட்டுமல்ல பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் வருகிறார்கள். இதில் 14 பேர் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 14 பேர் இந்திய அளவில் கலந்துகொண்டு சாதனை படைத்து வருகின்றனர். க்ரூப் விளையாட்டில் 1198 பேர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். மேலும் 7 பேர் தனிநபர் கின்னஸ் உலகசாதனை படைத்துள்ளனர் என்பது எங்களுக்கு பெருமிதமாக உள்ளது.

பிரெய்லி முறையில் கியூப் கற்றுக் கொடுக்கும் எண்ணம் எப்படி வந்தது?

பார்வையற்றோருக்கு கியூப் சொல்லித்தரும் ஆசைகள் எனது வாழ்வின் பெரும் லட்சியமாக இருந்தது . ஆனால் ப்ராக்டிகலாக அவர்களுக்கு கியூப் கற்றுத் தர எனக்கு நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருந்ததும் உண்மை. முதலில் ஸ்டிக்கர் பொட்டுக்களை ஒட்டி வைத்து தான் பயிற்சி தர ஆரம்பித்தேன். ஆனால் குழந்தைகளின் விரல்கள் தொடர்ந்து படுவதால் சில பொட்டுகள் உதிர்ந்ததில் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பல ஸ்டிக்கர்களை உபயோகித்து பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை. இறுதியாக நானே பிரெய்லி கற்றுக்கொண்டு புதுவகையான கியூப் ஒன்றை மிகவும் சிரமப்பட்டு உருவாக்கினேன். முதலில் அதனை தயாரிக்க அதிக செலவு பிடித்தது. பின்னர் வில்லிபுத்தூரில் குறைவான விலைக்கு இதனை செய்து தந்தார்கள். பின்னர் அந்த ஸ்பெஷல் பிரெய்லி முறையிலான கியூப்களை வாங்கி பார்வையற்றோருக்கு சொல்லித்தர ஆரம்பித்தேன். விழியிழந்தோருக்கு கியூப் போடுவதில் உள்ள ஆர்வமும் விடாமுயற்சியும் எனக்கு என் பெரும் சிரமத்தை மறக்கடிக்க செய்தது என்பதே உண்மை.

தமிழ்நாடு கியூப்அசோசியேஷன் குறித்து?

தமிழ்நாடு கியூப் அசோசியேஷனில் நான் ப்ரெஸிடெண்ட் ஆக இருக்கிறேன். இதனையும் நாங்கள் தான் பெருமுயற்சிகளோடும், பெரும் சிரமத்தோடும் தான் துவங்கினோம். தமிழ்நாட்டில் அதற்கு முன்பு கியூப் கற்றுக் கொடுப்பதற்கு என்று எந்தப் பயிற்சி வகுப்புகளும் இருந்ததில்லை. தமிழ்நாட்டில் க்யூபிற்கான பயிற்சி வகுப்புகளையும் முதலில் நாங்கள்தான் ஆரம்பித்தோம். கியூப்ங்கிறது நிறங்களை ஒன்று சேர்க்கும் ஒரு சாதாரண விளையாட்டுத் தானே. இதற்கெல்லாம் ஒரு பயிற்சி வகுப்புகள் அவசியமா என்று என்னிடம் கேட்டவர்கள் பலர். பின்னர் பயிற்சி வகுப்புகளுக்கு பிறகு குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தைப் பார்த்துவிட்டு பலர் எங்களைப் பாராட்டி இருக்கிறார்கள். தற்போது தமிழ்நாடு கியூப் அசோசியேஷனில் 380 பேர் மெம்பராக உள்ளனர். இதன் மூலம் பல பேருக்கு கியூப் விளையாட்டை கற்றுக் கொடுப்பதோடு, அந்த குழந்தைகள் பல்வேறு சாதனைகள் படைக்க உதவி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாமா?

எங்களிடம் குழந்தைகள் மட்டுமல்ல வயதானவர்கள், பார்வையற்றோர் மற்றும் காது கேளாமை மற்றும் வாய்பேசாதோர் என பலரும் கற்றுக்கொள்கிறார்கள். கியூப் கற்றுக்கொண்டு போட ஆரம்பித்த பிறகு அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை கண்கூடாக பார்க்கிறோம். இதன் மூலம் வயதானவர்கள் டிஸ்லெக்ஸியா, அம்னிஷியா போன்ற பல குறைபாடுடையவர்கள் நல்ல முன்னேற்றம் அடைகிறார்கள். குழந்தைகளில் கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் இதைக் கற்றுக் கொள்வதால் நற்பலனை பெறுகிறார்கள். கியூப் போடுவதால் மன அழுத்தம் குறைவாகிறது. பல ஆசிரியர்களும் மற்றும் டாக்டர்களும் பலருக்கு கியூப் கற்றுக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களின் குழந்தைகள் நிறைய பேருக்கு கியூப் சொல்லிக் கொடுத்து வருகிறோம். ஜவான் படத்திற்காக விஜய் சேதுபதி அவர்களுக்கு கியூப் சொல்லிக்
கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது.

விருதுகள் மற்றும் பாராட்டுக்கள்…

கியூப் எங்களது வாழ்விலும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியது எனலாம். இதற்காக பல்வேறு விருதுகள் பாராட்டுதல்களை பெற்றது மிகவும் மதிப்புமிக்கதாகவும், மகிழ்வானதாகவும் இருந்தது. இளம் தொழிலதிபர் விருது, சிறந்த சமூக சேவகர் விருது, தமிழகத்தின் சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது, இந்தியாவின் சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது போன்ற பல்வேறு விருதுகளை வென்றுள்ளோம். வேர்ல்ட் மாஸ்டர் ஆப் கியூப் விருதினையும் வென்றுள்ளோம். ஆனந்த் ராஜேந்திரன் கோல்டன் ஐகான் விருதுகள், அம்பாஸிடர் ஆப் ரூபிக் கியூப் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

எதிர்கால திட்டங்கள் குறித்து…

தற்போது அரசு உதவிபெறும் பள்ளியில் கியூப் இலவசமாக கற்று தருகிறோம். இன்னும் நிறைய அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கியூப் சொல்லித் தர வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள்,பார்வையிழந்தோர், காது கேளாதோர், வாய்பேசாதோர் என பலரையும் கின்னஸ் ரெக்கார்ட்ஸ் வரை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற ஆசைகள் உண்டு. அதற்கு ஸ்பான்சர்கள் கிடைத்தால் இன்னும் சிறப்பாக செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது அதற்கான முழு முயற்சிகள் செய்து வருகிறோம். எம்ஜிஆர் யூனிவர்சிட்டி பிரசிடெண்ட் Acs அருண்குமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கின்னஸ் ரெக்கார்ட்ஸ் அமைப்பை உருவாக்கி தந்தார். அவருக்கு எங்களது அசோசியேஷன் சார்பாக நன்றிகள் பல. மேலும் எங்களது அசோசியேஷன் விழாவிற்காக பல ஏற்பாடுகள் செய்து தந்ததற்கும் மிகுந்த நன்றிகள் என்கிறார் தமிழ்நாடு கியூப் அசோசியேஷனில்
பிரசிடெண்ட் சந்திரிகா.
– தனுஜா ஜெயராமன்.

You may also like

Leave a Comment

14 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi