பாட்னா: உத்தரபிரதேச மாநிலத்தில் கதாகலாட்சேபம் செய்த யாதவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்வினையாக பீகார் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் பிராமணர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகுட்மணி சிங் யாதவ். அவரது உதவியாளர் சந்த் குமார் யாதவ். இருவரும் மாநிலம் முழுவதும் கதாகலாட்சேபம் செய்து வந்தனர். இந்நிலையில், ‘பிராமணர் அல்லோதோர் கதாகலாட்சேபம் செய்யக்கூடாது’ என்று கூறி கடந்த வாரம் அவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். மேலும், அவர்களுக்கு மொட்டையும் அடித்தனர். இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த, 4 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு உத்தரபிரதேசத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தற்போது இந்த சம்பவம், வேறு ஒரு எதிர்வினையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, அண்டை மாநிலமான பீகாரிலும் இந்த சம்பவம் எதிரொலித்துள்ளது. அங்குள்ள மோதிஹாரி மாவட்டம் அடாபூர் அருகில் உள்ள திகுலியா கிராமத்திற்குள் பிராமணர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. யாதவ் சமூக மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களில் பிராமாணர்களை அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராமண சமூகத்தின் பண்டிதர்கள், பூசாரிகளுக்கு எதிரான இந்த முடிவை அந்த கிராம பஞ்சாயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகை கிராமத்தின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
அதில், ‘இந்த கிராமத்தில் பிராமணர்கள் பூஜை செய்யவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி வரும் பிராமணர்களுக்கும், அவர்களை அழைத்து வரும் கிராமத்தார்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனால், அந்த கிராமத்திற்கு செல்வதை பிராமணர்கள் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசத்துக்கு இணையாக பீகாரிலும் யாதவர்கள் சமூக மக்கள் அதிகளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.