திருப்பத்தூர்: திருப்பத்தூரில், ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்மக்கமலம் பூ ஒருவரது வீட்டில் பூத்து குலுங்கியது. திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் அன்பு. இவரது வீட்டில் வெற்றிலை உட்பட பல்வேறு வகையான செடிகளை வளர்த்து வருகிறார். அதேபோல், பிரம்மக்கமலம் என்ற பூச்செடியையும் வளர்த்து வருகிறார். இந்த பூவானது ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் இரவில் பூக்கும் தன்மையுடையது.
அதன்படி, அன்புவின் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பிரம்மக்கமலம் பூச்செடியில் 10க்கும் மேற்பட்ட பூக்கள் நேற்று முன்தினம் இரவு பூத்து குலுங்கின. ஆடி மாதத்தில் பூத்த இப்பூக்களை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும், பிரம்மக்கமலம் பூவிற்கு பூஜை செய்தும் வழிபட்டனர்.