Friday, March 29, 2024
Home » பிரம்மஹத்தி தோஷம் போக்கும் பிந்துமாதவப் பெருமாள்

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் பிந்துமாதவப் பெருமாள்

by Kalaivani Saravanan

துத்திப்பட்டு, வேலூர்

மாதவனை காண்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் இந்த மானுடம். அப்படிப்பட்ட மாதவன் தனது இரு தேவியர்களோடு இணையில்லா அழகுடன் திகழும் திருத்தலம்தான் துத்திப்பட்டு. தேவேந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விமோசனம் பெற்றிட, இவ்வுலகில் ஐந்து மாதவப் பெருமாள்களை, ஐந்து திவ்விய திருத்தலங்களில் ஸ்தாபித்தான். முதலில் வடநாட்டில் அலகாபாத் நகரின் பிரயாகையில் வேணி மாதவரையும், இரண்டாவதாக ஆந்திர மாநிலம் பிட்டாபுரத்தில் குந்தி மாதவரையும், மூன்றாவதாக ஆம்பூருக்கு அருகே துத்திப்பட்டில் பிந்து மாதவரையும், நான்காவதாக திருவனந்தபுரத்தில் சுந்தர மாதவரையும், பின் ஐந்தாவதாக ராமேஸ்வரத்தில் சேதுமாதவரையும் ஸ்தாபித்து, வழிபட்டு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி அடைந்தான்.

இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட காரணம் என்ன என்று பார்ப்போமா? ஆதியில் பிரம்மா தனது சிருஷ்டிக்காக (படைப்பிற்கு) நியமித்த பிரஜாபதிகளுள் ஒருவர் த்வஷ்டா. தேவர்களுள் ஒருவரான த்வஷ்டாவிற்கு, ஒர் சிறந்த மகன் பிறந்தான். சாந்த குணமும், தர்ம சிந்தனையும் நிறைந்த அவனுக்கு, விஸ்வரூபன் என்கின்ற பெயர். இவன் மூன்று தலைகளை உடையவன். ஒரு சமயம் விஸ்வரூபன், தந்தையின் ஆசிபெற்று கடுந்தவம் இயற்றினான். அந்த தவத்தின் தாக்கமானது, இந்திரனையும், இந்திரப் பதவியையும் ஆட்டம் காணச் செய்தது.

விடுவானா இந்திரன்? விஸ்வரூபனின் தவத்தைக் கலைத்திட பல முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால், அனைத்து முயற்சியும் வீணானது. கோபம் கொண்ட இந்திரன், தனது வஜ்ராயுதத்தால் விஸ்வரூபனை வெட்டி வீழ்த்திவிடுகின்றான். விஷயமறிந்த த்வஷ்டா, கோபத்தால் ஒர் அபிசார வேள்வியை நடத்தினான். அதிலிருந்து கிளம்பிய விராட்சூரன் என்னும் அசுரனை, இந்திரனை அழித்திட ஏவினான். இந்திரன் தந்திரமாய் அவனுடன் நட்பு பாராட்டி, அவனையும் கொல்கிறான். இதனால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து உலுக்கியது.

இந்திரன், பிரம்மாவை சரணடைந்தான். அவரது ஆலோசனைப்படி பூவுலகில் ஐந்து இடங்களில், ஐந்து மாதவப் பெருமாள் ஆலயங்களை, தேவதச்சனைக் கொண்டு நிர்மாணித்து, நியமத்துடன் பூஜித்து, திருமாலின் திருவருளால் பிரம்மஹத்தியிலிருந்து விமோசனம் பெறுகின்றான். இந்திரன் உருவாக்கிய நகரமே இன்று தேவநாதபுரம் என்று அழைக்கப்படுகின்றது. அதோடு, இந்த பஞ்ச மாதவப் பெருமாள் ஆலயங்களுக்கு, யாரொருவர் தலயாத்திரை செல்கிறார்களோ, அவர்களின் எல்லாவித பாப – சாப – தோஷங்களும் நீங்க வேண்டும் என வேண்டுகின்றான், தேவேந்திரன் தேவாதிராஜரிடம்.! அதன்படியே அருளினார் ஸ்ரீஹரி.

பின்னொரு சமயம், இந்த துத்திப்பட்டுக்கு சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிமிஷாசல மலையில், பிற முனிவர்களோடு தவம் புரிந்து வந்தார் ஸ்ரீரோம மகரிஷி. அப்போது பிரதூர்த்தன் என்கிற கந்தர்வன், முனிவர்களின் தவத்திற்கு பல இடையூறுகளை கொடுத்து வந்தான். ரோம மகரிஷியையும் இம்சித்தான். கோபம் கொண்ட ரோமமகரிஷி, அவனை புலியாக மாறும்படி சபிக்க, அவன் புலியாக மாறினான்.

ஆனால், அவன் புலி உருவில் முன்பைவிடவும் அக்காட்டில் வாழும் பிற உயிரினங்களுக்கும், முனிபுங்கவர்களுக்கும் அதிக துன்பங்களை கொடுத்தான். ரோம மகரிஷி, ஸ்ரீமஹாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்தார். ஸ்ரீஹரியோ, தன்மை ஸ்தாபித்த இந்திரனை அனுப்பி வைக்கின்றார். இந்திரன் நிமிஷாசல மலையை அடைந்து, ரோம மகரிஷியை வணங்கி, புலி உருவில் இருந்த பிரதூர்த்தனிடம் போரிட்டு, இறுதியில் அவனை வதம் செய்கின்றான். உயிர்பிரியும் தருணத்தில், பிரதூர்த்தன் மன்னிப்பு வேண்டிட, திருமால் காட்சி தந்து, அவனுக்கு நற்கதியளிக்கின்றார்.

அதோடு, ரோமமகரிஷிக்கும் பிந்துமாதவர் மோட்சமளித்து, தன்னோடு சேர்த்துக்கொள்கின்றார். இந்த தலம், தனது பெயரால் விளங்க வேண்டும் என்கிற பிரதூர்த்தனது வேண்டுகோளின்படி திருமாலின் அருளால், இந்தத் தலம் பிரதூர்த்தப்பட்டு என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் துத்திப்பட்டு என்றானது. இந்த தலத்தின் மகிமையை பிரம்மாண்ட புராணம், சனத்குமார சம்ஹிதையில் உள்ள பாஸ்கர க்ஷேத்திர மஹாத்மியம் விரிவாக விவரிக்கின்றது. பேருந்து சாலையை ஒட்டி, ஆலய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் உள்ளே நுழைந்து தெருவின் இறுதிக்கு செல்ல. அழகிய ஐந்து நிலை ராஜகோபுரம், ஓங்கிய மதில்கள் சூழ அற்புதமாக அமைந்துள்ளது. சில படிகள் கீழே இறங்கி உள்ளே செல்ல, நேராக பலிபீடம், தீபஸ்தம்பம், மற்றும் கொடிமரத்தை கண்டு, வணங்கி, உடன் கருடாழ்வாரையும் நமஸ்கரிக்கின்றோம். 36 தூண்களைக் கொண்ட முகமண்டபம் அற்புதமாக காட்சியளிக்கின்றது. அதை கடந்து சென்றால் மகாமண்டபம். மகாமண்டபத்தில் விஷ்வக்சேனர் மற்றும் ஸ்ரீமத் ராமானுஜரைத் தொடர்ந்து பன்னிரு ஆழ்வார்களும், உடன் ரோம மகரிஷியும் அருள்பாலிக்கின்றனர்.

அடுத்ததாக உள்ள அர்த்த மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. கருவறையை நோக்கிட, கருணைக் கடலாய் “ஸ்ரீபிந்துமாதவப் பெருமாள்’’ சங்கு சக் கரம் ஏந்தி, கதாயுதத்துடன் அபயவரதம் காட்டி, ஸ்ரீதேவி பூதேவி ஆகிய தனது இரு தேவியர்களுடன், சுமார் 6 1/2 அடி உயரத்தில் கம்பீரமாய் பேரருள் புரிகின்றார். அதியற்புதமான திருக்கோலம். நாளெல்லாம் பார்க்கலாம் இவரது திருக்கோலத்தை கண்ணிமைக்காமல். அத்தனை அழகையும் தன்னுள் கொண்டு பேரெழில் பொழிகின்றார்.

உற்சவத் திருமேனிகளாக, சாளக்கிராமங்கள், தாயார்களுடன் கூடிய ஸ்ரீவரதராஜப் பெருமாள் மற்றும் ஸ்ரீஅனுமன் வீற்றருளுகின்றார். பிந்துமாதவர், ஸ்ரீவரதராஜர் என்றும் அழைக்கப் படுகின்றார். ரோம மகரிஷிக்கு அருளியதால் தனது அபயகரத்தை ஈசான திசை நோக்கி அருளுகின்றார். பின்பு, ஆலயவலம் வருகையில் முதலில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நதி கொண்டுள்ளார். இச்சந்நதிக்கு பின்னே பத்மாஸனி தாயார் தனிச் சந்நதி கொண்டு திருவருள்புரிகின்றாள். அழகே உருவாய், அக்ஷய பாத்திரமாய், குல குணவதியாய் திகழும் தாயார், இங்கு குமுதவல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகின்றார்.

பின்பு, ஆலயத்தை சுற்றுகையில் கோஷ்டமாடங்களில் லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சிற்பங்களை காண்கிறோம். உடன் ஸ்ரீவிஷ்ணு துர்க்கையையும் காணுகின்றோம். வாமபாகத்திலே ஸ்ரீகோதை நாச்சியார் என்னும் ஆண்டாள் தனிச் சந்நதி கொண்டு திருவருள் பொழிகின்றாள். ஆண்டாள் சந்நதிக்கு முன்னே நாககன்னிகைகளுக்கு தனியாக மேடை அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர், சிறிய திருவடியென்னும் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி தென்முகம்கொண்டு அருளுகின்றார். குபேர திசையான வடதிசையில் வசந்த மண்டபம் அற்புதமாக கட்டப்பட்டுள்ளது. ஈசான திசையில் ஸ்ரீரோம மகரிஷியின் சந்நதி முற்றிலும் அழிந்ததால் அவரது சிலாரூபம் ஆலய மகா மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  நரசிம்மவர்ம பல்லவனால் எழுப்பப்பட்ட இவ்வாலயம், பின்பு கிருஷ்ணதேவராயரால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அமைதியைத் தரும் ஆலயம். பெருமாளின் கருவறை விமானம் மூன்று கலசங்களுடன் `தேஜோ விமானம்’ என்று அழைக்கப்படுகின்றது. தல விருட்சமாக `அத்திமரம்’ திகழ்கின்றது. தல தீர்த்தமாக க்ஷீரநதி எனப்படும் பாலாறு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வருடாவருடம் காணும் பொங்கல் அன்று நடைபெறும் பார்வேட்டை உற்சவத்தில் பெருமாள் நிமிஷாசல மலைக்கு எழுந்தருளி, ரோம மகரிஷிக்கு காட்சியளிக்கும் திருவிழாவானது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது.

அதுபோன்று வைகாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவமும் சிறப்புடன் நடைபெறுகின்றன. ஆடி 5 வெள்ளிகள் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. போகியன்று ரங்க நாச்சியார் திருக்கல்யாணமும், வைகுண்ட ஏகாதசியும் மிகவும் பிரசித்தம். பங்குனி உத்திரத்தன்று பாஞ்சராத்திர ஆகம முறைப்படி திருச்சானூரில் இருந்து அர்ச்சகர்கள் இங்கு வந்து ‘‘திருமலையில் ஒரு நாள்’’ (திருப்பதியில் நடப்பது போன்று) உற்சவங்களை நடத்தித் தருகின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி உற்சவம் மற்றும் நவராத்திரி ஆகியனவும் சிறப்புற நடத்தப்படுகின்றன.

பாஞ்சராத்ர ஆகம விதிப்படி மூன்று வேளை ஆராதனைகள் நடந்திடும் இவ்வாலயம், தினமும் காலை 6.30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரையும் திறந்திருக்கும். ஒருவரது ஜாதகத்தில் புதன் நீசம் பெற்றிருந்தாலும், வலிமை இழந்தாலும் இங்கு பிந்து மாதவப் பெருமாளுக்கு 5 வாரம் வந்து வழிபட்டு, ஆறாவது வாரம் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி, துளசி அர்ச்சனை செய்ய, வளமான கல்வி வளமும், சிறந்த ஞானமும் பெருகும்.

மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாக கன்னிகைகளுக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள், பக்தர்கள் கரங்களிலேயே அபிஷேகம் செய்து, ஐந்தாவது வெள்ளியில் மாங்கல்யம் சார்த்தி வழிபட, திருமணம் விரைவில் கைகூடும். நாக தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் இங்கு நாக கன்னிகைகளுக்கு நெய்தீபம் ஏற்றி, ஏழுமுறை வலம் வந்து ஸ்ரீபிந்துமாதவரையும் வேண்டிக்கொள்ள தோஷ நிவர்த்தி பெறலாம்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டத்திலுள்ள இவ்வூர், ஆம்பூர் – குடியாத்தம் பேருந்து சாலையில் ஆம்பூரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தொகுப்பு: மோ.கணேஷ்

You may also like

Leave a Comment

nineteen + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi