நன்றி குங்குமம் ஆன்மிகம்
பிரம்மதண்டம், யோகதண்டம் என்ற இரண்டும் வெவ்வேறானவை என்றாலும், அன்பர்கள், நடைமுறையில் இரண்டையும் ஒன்றாகவே கொள்கின்றனர். இதனை வெளியில் பேசியும் எழுதியும் வருகின்றனர். `பிரம்மதண்டம்’ என்பது துறவுநிலை. எய்தியவர்கள் பிரம்மத்தைத் தேடி பயணிப்பவர்கள், பயிற்சி செய்பவர்கள். அதைக் குறிக்க ஏந்தும் தண்டமாகும். இது பலாச மரத்தால் செய்யப்பட வேண்டும் என்பர். நீண்ட மூங்கிலை பிரம்ம தண்டமாகவும் ஏந்துவர். வேதாந்த துறவிகள், மூங்கிலாலான தண்டத்தையும், அதன் உச்சியில் கௌபீனத்தையும் கட்டியிருப்பதைக் காணலாம்.
பெரியபுராணத்தில், அமர்நீதி நாயனாரின் பெருமையை வெளிப்படுத்த வந்த இறைவன் தலையில் சிகை, திருமேனியில் வெண்ணீற்றுப்பூசு, தோளில் வெண்புரிநூல் அதில் மான்தோல், அரையில் கோவண ஆடை அணிந்து கையில் தருப்பையால் செய்த பவித்திர மோதிரம், கையில் தண்டம் அதன்மீது திருநீற்றுப்பை கோவணம் ஆகியவை இருக்க வந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.
தண்டில் இருந்து கோவணத்தை அவிழ்த்து, அமர்நீதியாரிடம் அளித்தார் என்ற செய்தியையும் காண்கிறோம். ஆதிசங்கர பகவத் பாதர் முதலான சந்நியாசிகள் பிரம்மதண்டம் ஏந்தியுள்ளனர். `யோகதண்டம்’ என்பது கையை உயரத் தூக்கி வைத்துக் கொள்ளவும், மூச்சுக்காற்றுப் பயிற்சிக்குத் துணை செய்யவும் பயன்படுத்தும் தண்டமாகும். ரிஷிகள், யோக நெறி நிற்போர், யோக தண்டத்தை வைத்திருப்பர். இந்த இரண்டு தண்டங்களும் வெவ்வேறு பயன்பாட்டிற்கு
உரியனவாகும்.
தொகுப்பு: அனந்தபத்மநாபன்