Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பைரவர் பிரதிஷ்டை செய்த பரமன்

ராமகிரியில் இரண்டு பெரிய கோயில்கள் உள்ளன. ஒன்று மலையுச்சியில் அமைந்துள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோயில். இன்னொரு கோயில் மலையடிவாரத்தில் உள்ளது. மலை மீது உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோயில், 1969-ல் கட்டப்பட்ட புதிய கோயில். மலையடிவாரத்திலுள்ள வாலீஸ்வரர் கோயில் பழமையானது. இது ஒரு சிவாலயமாக இருந்தாலும், இங்குள்ள பிரதான மூர்த்தி காலபைரவர். இவர் சந்தான ப்ராப்தி பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார். புராணத்தின்படி ராமர் தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள ராமேஸ்வரத்தில் சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபட விரும்பினார். பூஜை செய்வதற்கு சிவலிங்கம் தேவை. இதற்காக இந்தியாவின் வடபகுதியிலுள்ள காசியிலிருந்து ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வருமாறு அனுமானுக்கு உத்தரவிட்டார். அனுமான் காசியிலிருந்து ராமகரி வழியாக வந்துகொண்டிருக்கும்போது, பைரவர், தனது சக்தியால் ஹனுமானுக்கு வியர்க்கும்படியும், அவர் சோர்வுறுமாறும் செய்தார். அனுமான் தண்ணீர் அருந்த நினைத்தார்.

இந்தப் பகுதியில் ஒரு தடாகம் இருந்ததைப் பார்த்தார். அங்கே இருந்த சிறுவன் ஒருவனிடம் - அது பைரவர் என்று தெரியாமலேயே - சிவலிங்கத்தைக் கொடுத்தார். தண்ணீர் குடித்தபிறகு, சிவலிங்கத்தை வாங்கிக் கொள்வதற்காக அங்கே வந்தபோது, அந்தச் சிவலிங்கம் ஏற்கெனவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் கண்டார்.அந்த லிங்கத்தைப் பெயர்க்கத் தன்னால் இயன்ற மட்டும் முயற்சித்தார். ஆனால், அவரது முயற்சி கைகூடவில்லை. அந்தத் தடாகத்தை மலையாக மாறுமாறு சபித்துவிட்டு, இன்னொரு சிவலிங்கத்தைக் கொண்டு வருவதற்காக காசிக்குப் பறந்தார். அனுமானின் சாபத்தினால் மலையாக மாறிய அது ராமகிரி என்றழைக்கப்பட்டது. அனுமானின் வாலினால் அந்த லிங்கம் பெயர்த்தெடுக்க முயற்சிக்கப்பட்டதால், அதற்கு ‘வாலீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது. தமிழில் ‘வால்’ எனப்படுவது, சமஸ்கிருதத்தில், ‘வாலம்’ எனப்படுகிறது. இப்போதும் அந்தச் சிவலிங்கம் சற்றே வடபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

‘ராமகிரி வாலீஸ்வரர் கோயில் பல்லவ அரசனால் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அந்தக் கோயிலினருகே சுத்தமான தண்ணீர் உள்ள தடாகம் உள்ளது. அந்தத் தண்ணீர் ஒரு நந்தியின் வாயிலிருந்து வருகிறது. இங்கு வருடத்தின் எல்லா நாட்களிலும் தண்ணீர் விழுகிறது. கோயிலின் முன்னாலுள்ள கோயில் குளத்தை ‘நந்தி தீர்த்தம்’ என்கிறார்கள். தடாகத்தினருகே ஒரு சிறு சிவலிங்கம் இருக்கிறது. அந்தத் தடாகத்தின் சுவரிலிருந்து நந்தியின் முன்பகுதி நீட்டிக்கொண்டிருக்கிறது. அந்த மலையில் எங்கிருந்தோ அந்தத் தண்ணீர் உற்பத்தியாகிறது. அது ஒரு சிறு கிணற்றில் விழுந்து, அதிலிருந்து நந்தியின் வாய் வழியே அந்தத் தண்ணீர் வருகிறது. அது தடாகத்தில் வந்து விழுகிறது.

தங்களுக்கு நினைவு தெரிந்த காலம் முதல், அந்த நீரின் ஓட்டம் நின்றதே இல்லை என்று அக்கிராம மக்கள் கூறுகிறார்கள். நந்தியை வந்தடையும் அந்தத் தண்ணீரின் உற்பத்தி ஸ்தானத்தையும் அவர்கள் அறிவார்கள். பிரதோஷ வழிபாடு நடத்தப்படாத ஒரே சிவன் கோயில் இதுதான் என்பதும் இன்னுமொரு விசேஷம்.

விநாயகருக்கும் கோயில் இருக்கிறது. விநாயகர் கோயிலின் பின்னே செல்லும் படிக்கட்டுகள் உங்களை மலை மீது வீற்றிருக்கும் சுப்பிரமணியஸ்வாமி கோயிலுக்கு அழைத்துச் செல்கிறது.இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரமோ, கொடி மரமோ இல்லை. இரண்டு பகுதிகளாக இக்கோயில் உள்ளது. முதல் பகுதியில் பைரவர் பிரதான தெய்வமாகக் காட்சி அளிக்கிறார். இரண்டாவது பகுதியில் உள்ள சிவலிங்கம், வாலீஸ்வரர் என்ற பெயரில் பிரதான தெய்வமாக வீற்றிருக்கிறார்.மூலஸ்தானத்தில் கோயிலின் பிரதான மூர்த்தியாக உயரமான பிரமாண்டமான பைரவர் வீற்றிருக்கும் ஒரு அபூர்வமான திருக்கோயில் இது. பைரவரின் முன்பு பைரவரின் வாகனமான நாயின் வடிவம் நிற்பதையும் காணலாம். பைரவர் கோயிலை ஒட்டி காளி மாதாவுக்குத் தனிச்சந்நதி உள்ளது. பைரவரின் சந்நதியின் பிராகாரச் சுற்றில், பல்வேறு நிலைகளில் பைரவர் காட்சி தரும் சிறு சிறு சிற்பங்கள் உள்ளன. பைரவர் சந்நதியின் நுழைவாயிலில் இரண்டு சிவலிங்கங்களும், வித்தியாசமான தும்பிக்கையுடன் கூடிய சித்தி விநாயகரும் இருக்கிறார்கள்.

கோயிலின் இன்னொரு பகுதியில் வாலீஸ்வரராக சிவபெருமான் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே ஒரு சிறு நந்தியும், ஹனுமானும் உள்ளனர். பொதுவாக ஹனுமார், ராமர் சந்நதிக்கு எதிரேதான் இருப்பார். சிவனுக்கு எதிரே இருக்க மாட்டார். அங்கு இன்னொரு பெரிய, அழகிய நந்தி சிலையும் உள்ளது. சிவபெருமான் சந்நதியில் இரண்டுபுறமும் துவாரபாலகர்கள் நிற்கின்றனர். இதேபோல் முகப்பில் விநாயகரும், சந்திரமௌலீஸ்வரரும் உள்ளனர்.பிராகாரங்களில் பிரம்மா, சண்முகர், வீரபத்திரர், துர்க்கை, சூரியன், சண்டிகேஸ்வரர், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், ஆஞ்சநேயர், அப்பர் முதலானோர் உள்ளனர். அகஸ்திய முனிவர் வித்தியாசமான தவக்கோலத்தில் காணப்படுகிறார். அவர் தலை ஒரு தொப்பியினால் மூடப்பட்டுள்ளது. பல்லவர் சிற்பக் கலையின் அற்புதமான உதாரணமாக, விநாயகர், கஜமுகா என்ற பெயரில் வீற்றிருக்கிறார். வேறு எங்கும் காண முடியாத அமர்ந்த நிலையில் காணப்படும் வீரபத்திரர் இங்கே வீற்றிருக்கிறார். இதே பிரதான நுழைவாயிலுள்ள விநாயகரும் வித்தியாசமாக வீற்றிருந்து நம்மைக் கவருகிறார்.

தேவி மரகதாம்பிகைக்குத் தனிச்சந்நதி உள்ளது. அம்பிகையும் பிரமாண்டமான வடிவில் அன்பே உருவாய் அருளே வடிவாய் கண்ணைக் கவருகிறார். அனுமான் சிவலங்கத்தைப்பற்றி இருக்கும் காட்சி சிறு சிற்பமாக சுவரில் உள்ளது. இக்கோயில் அமைதியாக உள்ளது. ஒரு புராதன உணர்வு நம்முள் எழுகிறது.சிவனுக்கு ஐந்து முகங்கள், அவை - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோ ஜாதம், அகோரம், சென்னையருகே பஞ்சபிரம்ம ஸ்தலம் எனப்படும் ஐந்து சிவாலயங்கள் உள்ளன. ராமகிரியிலுள்ள இந்த வாலீஸ்வரர் கோயில் சிவனின் ஈசான முகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பைரவர், ‘சந்தான பிராப்தி பைரவர்’ எனப்படுகிறார். குழந்தையில்லாத தம்பதியர் இந்தக் கோயிலுள்ள பைரவரை வணங்கினால், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும்.திருப்பதி - புத்தூர் - நாராயணவனனம் ரோடு - பிக்காட்டூர் - ராமகிரி, பிக்காட்டூரிலிருந்து ராமகிரி 2 கி.மீ. பைபாஸ் சாலையில் உள்ளது.சென்னையிலிருந்து திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி வழியாக ராமகிரியை அடையலாம்.திருப்பதியிலிருந்து இந்த ஸ்தலம் 58 கி.மீட்டரிலும், சென்னையிலிருந்து 75 கி.மீட்டர் தொலைவிலுமுள்ளது.காலை 8.00 மணி முதல் 11.45 மணி வரை. மாலை 3.00 மணி முதல் 5.45 மணி வரை கோயில் திறந்திருக்கும்.