சென்னை: சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, வாலிபர் ஒருவரை பெரியவர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: போரூர் பகுதியில் வசித்து வந்த மன்னார்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது வாலிபர், அந்த பகுதியில் 10ம் வகுப்பு படித்துவரும் 15 வயது சிறுமியை காதலித்துள்ளார்.
கடந்த 6 மாதத்துக்கு முன்பு, போரூரில் உள்ள விநாயகர் கோயிலில் சிறுமிக்கு தாலி கட்டி, தனது சொந்த ஊரான திருவாரூர், மன்னார்குடிக்கு கடத்தி சென்றுள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் அங்கு சென்று, 2 பேரையும் மீட்டுள்ளனர். அப்போது, சிறுமியை இனிமேல் தொந்தரவு செய்யக்கூடாது, என்று அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்து அனுப்பிவிட்டு, சிறுமியை, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு அந்த வாலிபர், முகப்பேர் பகுதியிலேயே தங்கியுள்ளார்.
இந்த சிறுமி, தனது பெற்றோருக்கு தெரியாமல், அந்த வாலிபரை அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சிறுமி தனது தாய் மற்றும் பாட்டிக்கு இரவில் பால் கொடுத்துள்ளார். அதை குடித்த அவர்கள், வழக்கத்தை விட நீண்ட நேரம் அசந்து தூங்கியுள்ளனர். இரவில் எதற்காக இவ்வளவு நேரம் தூக்கம் வருகிறது என சிறுமி மீது சந்தேகமடைந்த அவர்கள், சிறுமி வைத்திருந்த பையை ரகசியமாக சோதனை செய்தபோது, அதில் ஏராளமான மாத்திரைகள் இருந்துள்ளன. அந்த மாத்திரைகளை கொண்டு சென்று, மெடிக்கல் ஷாப்பில் காண்பித்து, இது என்ன மாத்திரை என்று கேட்டபோது, தூக்க மாத்திரை என தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுபற்றி சிறுமியிடம் கேட்டபோது, அந்த மாத்திரைகளை காதலன் வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார்.
மேலும் விசாரணையில், பெற்றோருக்கு தெரியாமல் சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்த காதலன், அதன்மூலம் மீண்டும் தனது காதலை தொடர்ந்துள்ளார். மேலும், இருவரும் தனிமையில் இருக்க விருப்பப்பட்டுள்ளனர். இதையடுத்து, மெடிக்கல் ஷாப்பில் தூக்க மாத்திரைகளை வாங்கிய காதலன், அதை சிறுமியிடம் கொடுத்து, இரவில் உனது தாய், பாட்டிக்கு பாலில் கலந்து கொடு. அவர்கள் தூங்கிய பிறகு நாம் தனிமையில் இருக்கலாம், என கூறியுள்ளார்.
அதன்படி, தினமும் இரவில் தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து தாய், பாட்டிக்கு கொடுத்த சிறுமி, அவர்கள் அசந்து தூங்கிய பிறகு, காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தாய், பாட்டிக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க வைத்துவிட்டு, காதலனுடன் சிறுமி உல்லாசமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.