பெரம்பூர்: இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் ஏற்பட்ட நட்பு காரணமாக மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெருங்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரு மகன், 2 மகள்கள். இதில் மகன், கடந்த 3 மாதத்துக்கு முன் தூக்கிட்டு இறந்தார். மூத்த மகள் கல்லூரியில் படிக்கிறார். இளைய மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கின்றார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒன்றரை வருடங்களாக பெரம்பூரை சேர்ந்த 18 வயது நபரை பள்ளி மாணவி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக பெரம்பூர் பகுதியில் உள்ள பூங்காவுக்கு அடிக்கடி வந்து காதலனுடன் ஜாலியாக பேசிவிட்டு செல்வாராம்.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு சிறுமி பூங்காவுக்கு வந்தபோது அவரிடம் காதலன், ‘’தனது வீட்டில் யாரும் இல்லை. எனவே, அங்கு சென்று ஜாலியாக பேசுவோம்’ என்று அழைத்துச்சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன்பிறகு மாணவியை அனுப்பிவைத்து விட்டு தொடர்ந்து சந்தித்துவந்துள்ளனர். இந்த நிலையில், மாணவியின் வயிற்றில் மாற்றம் தெரிந்ததும் தாய் விசாரித்துள்ளார். அப்போது மாணவி, ‘’வயிற்றில் பிரச்னை உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது நடந்தது பற்றி தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மாணவியை அழைத்துச்சென்று மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுசம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகாரின்படி, செம்பியம் அனைத்து மகளிர் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவனை தேடி வருகின்றனர்.