திருமலை: திருப்பதி மலைப்பாதையில் சிறுவன், சிறுமியை தாக்கவில்லை என அறிக்கை வந்ததால், கூண்டுகளில் சிக்கிய 5 சிறுத்தைகளில் 2 விடுவிக்கப்பட்டுள்ளதாக திருப்பதியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெற்றோருடன் பாத யாத்திரையாக சென்ற கவுசிக் என்ற சிறுவனை சிறுத்தை கவ்வி சென்றது. பக்தர்களும், வனத்துறையினரும் விரட்டி சென்றதில் காயங்களுடன் சிறுவனை சிறுத்தை விட்டு சென்றது. சில நாட்கள் கழித்து பெற்றோருடன் சென்ற லட்ஷிதா(6) என்ற சிறுமியை சிறுத்தை கவ்விச்சென்று கடித்து கொன்றது.
இதையடுத்து வனத்துறையினர் சார்பில் கூண்டு வைத்து 5 சிறுத்தைகள் அடுத்தடுத்து பிடிக்கப்பட்டு திருப்பதி உயிரியல் பூங்காவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதில் முதலில் பிடிபட்ட சிறுத்தை, சிறுவனை தாக்கவில்லை என தெரிய வந்ததால் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. பின்னர், சிறுமியை கொன்ற இடத்தில் இருந்து கிடைத்த தடயங்களை வைத்து லட்ஷிதாவை தாக்கிய சிறுத்தையை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த, பிடிபட்ட சிறுத்தைகளின் நகம், ரத்தம், முடி போன்றவற்றை வைத்து மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் சிக்கிய சிறுத்தைகள், சிறுமியை கொல்லவில்லை என தெரியவந்தது.
இதையடுத்து தலைமை வனவிலங்கு காப்பாளரின் அனுமதி பெற்று, 2வதாக பிடிப்பட்ட சிறுத்தை நேற்று முன்தினம் என்எஸ்டிஆர் (நாகார்ஜுனா சாகர் ஸ்ரீசைலம் டைகர் ரிசர்வ் வனப்பகுதியில்) உள்ள குண்ட்லா பிரம்மேஸ்வரா வன சரணாலயத்தில் விடப்பட்டது. 3வதாக பிடிபட்ட சிறுத்தை விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திரா காந்தி உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது. 4வது சிறுத்தை ஆகஸ்ட் 28ம் தேதியும், 5வது சிறுத்தை செப்டம்பர் 7ம் தேதியும் கூண்டில் பிடிப்பட்டுள்ளது. இவற்றின் மரபணு சோதனை முடிவுகள் வராததால் திருப்பதி உயிரியல் பூங்காவில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக திருப்பதியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் திருப்பதி மலைப்பாதையில் மேலும் 5 சிறுத்தைகள் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.