செய்யூர்: செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் டேனியல் மகன் ஜெப்ரின் (4). இவர், நேற்று காலை வீட்டின் எதிரில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த வெறிபிடித்த நாய், சிறுவரின் வலது தோள்பட்டை பகுதியில் பலமாக கடித்தது. இதில், பலத்த காயமடைந்த சிறுவன் கதறி துடித்துள்ளான். இதையறிந்த பெற்றோர், உடனடியாக சிறுவனை மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனையில், சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல், அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவரையும், வலது காலில் கடித்துவிட்டு, அந்த நாய் அங்கிருந்து ஓடியுள்ளது, இப்படி ஒரேநாளில் தொடர்ந்து, 2 நபரை நாய் கடித்து இருப்பது செய்யூர் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, துறைச்சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் உலா வரும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.