விருத்தாசலம் : திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி தாலுகா, பிரியன்சரி கிராமம் சங்கரநாராயணன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி இசக்கியம்மாள் (41), இவர்களுக்கு மாடசாமி (16) என்ற மகனும் இந்துமதி (21), சண்முகசுந்தரி (12) என்ற மகள்களும் உள்ளனர். மாடசாமி 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்துமதி செங்கல்பட்டில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
அவரை பார்ப்பதற்கு நேற்று முன்தினம் இசக்கியம்மாள், மாடசாமி, சண்முகசுந்தரி மூவரும் செங்கல்பட்டு சென்று விட்டு மீண்டும் திருநெல்வேலி நோக்கி சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது மாடசாமி கழிவறை சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் இருக்கைக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே ரயில் நின்றபோது இசக்கியம்மாள் மாடசாமியை தேடி பார்த்தபோது அவர் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் மாடசாமியின் செல்போன் நம்பரை வைத்து தேடி பார்த்தபோது அவர் லால்குடி ரயில் நிலையத்திற்கும் காட்டூர் ரயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் கீழே விழுந்து இறந்து கிடந்துள்ளார்.
இதையடுத்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு தவல் தெரிவித்து ரயில்வே சிறப்பு இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.