Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனுக்கு எச்சரிக்கை: 58 வயதில் இளம் வீரருடன் மோதல்

எர்லிங்டன்: ஹெவிவெயிட் குத்துச் சண்டை போட்டியில், 44 முறை வென்றுள்ள, அமெரிக்காவை சேர்ந்த, ‘பேடஸ்ட் மேன்’ மைக் டைசன் (58), ஜேக் பால் (27) இடையிலான போட்டி, வரும் 15ம் தேதி நடக்கவுள்ளது. ‘இப்போட்டியில், முதல் ரவுண்டிலேயே டைசன் நாக்அவுட் ஆவார்’ என ஜேக்கின் சகோதரர் லோகன் பால் எச்சரித்துள்ளார். உலகின் ஒப்பற்ற குத்துச்சண்டை வீரராக, அமெரிக்காவின் மைக் டைசன் கருதப்படுகிறார். இவர், 50 போட்டிகளில் பங்கேற்று 44ல் எதிராளிகளை அதிரடியாக துவம்சம் செய்து வென்றவர்.

19 போட்டிகளில் இவருக்கு எதிராக போட்டியிட்ட வீரர்கள் நாக்அவுட் ஆகினர். அதிலும், 12 பேர் முதல் ரவுண்டிலேயே இடிபோல் இறங்கிய குத்துக்களால் தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டு விழுந்தனர். இதனால், ‘தி பேடஸ்ட் மேன் ஆப் தி பிளானட்’ என்ற பட்டப் பெயரும் டைசனுக்கு உண்டு. கடந்த 1997ல் நடந்த ஹெவிவெயிட் போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹோலிபீல்டின் காதை கடித்து துப்பியதால் சர்ச்சையில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் டைசன். 2002ல் நடந்த போட்டியில், லெனாக்ஸ் லுாயிசிடம் நாக்அவுட்டாகி, டைசன் தோற்றார்.

பாலியல் பலாத்காரம், போதை பழக்கம், போலீஸ் வாகனத்தின் மீது காரை மோதிய வழக்கு உள்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் திணறிய டைசன், சமீப காலமாக போட்டிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல குத்து சண்டை வீரரும், யூடியுப் பிரபலமுமான ஜேக் பால் உடனான குத்துச்சண்டை போட்டியில் டைசன் கலந்து கொள்ள உள்ளார். இப்போட்டி, வரும் 15ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் எர்லிங்டன் நகரில் நடக்க உள்ளது.

இதற்கிடையே, ‘ஜேக் பாலுடன் மோதினால் முதல் ரவுண்டிலேயே நாக்அவுட் ஆகி, டைசன் தோற்பது உறுதி’ என, பாலின் சகோதரர் லோகன் பால் எச்சரித்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த நிபுணர் எட்டி ஹெர்ன் கூறுகையில், ‘டைசன் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தனக்கு 58 வயதாகிறது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். போட்டியில் பங்கேற்க வேண்டாம் என யாராவது அவருக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்றார்.